Breaking News
Home / செய்திகள் / அடுத்துவரும் 75 நாட்களுக்கு உழைப்பை இரட்டிப்பாக்க வேண்டும்: பாஜக நிர்வாகிகளுக்கு அண்ணாமலை அறிவுறுத்தல்

அடுத்துவரும் 75 நாட்களுக்கு உழைப்பை இரட்டிப்பாக்க வேண்டும்: பாஜக நிர்வாகிகளுக்கு அண்ணாமலை அறிவுறுத்தல்

சென்னை: மக்களவைத் தேர்தலுக்காக அடுத்த 75 நாட்களுக்கு இரட்டிப்பாக உழைக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நிர்வாகிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை, அமைந்தகரையில் தமிழக பாஜக சார்பில் அமைக்கப்பட்டுள்ள மக்களவைத் தேர்தலுக்கான தலைமை அலுவலகத்தை அண்ணாமலை நேற்று திறந்து வைத்து பேசியதாவது: கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு கிட்டத்தட்ட எதிர்க்கட்சியாகவே மக்கள் பணிகளைச் செய்துள்ளோம். மத்தியில் நல்லாட்சி, தமிழகத்தில் திமுகவின் மோசமான ஆட்சி என காலம் கணிந்து வந்திருக்கிறது. பெரிய அரசியல் புரட்சிக்கு தயாராகிக் கொண்டிருக்கிறோம். இதேபோன்றதொரு சூழல் மீண்டும் கிடைக்காது. கட்சியின் பொறுப்பில் இருப்பவர்கள், இல்லாதவர்கள் என அனைவருமே மக்களை பாஜகவின் பக்கம் கொண்டு வரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். எனவே, அடுத்த 75 நாட்களுக்கு இரட்டிப்பாக உழைக்க வேண்டும்.

மேலாண்மைக் குழு: மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் மேலாண்மைக் குழு ஒருங்கிணைப்பாளராக மாநில துணைத் தலைவர் எம்.சக்கரவர்த்தி, இணை ஒருங்கிணைப்பாளர்களாக துணை தலைவர்கள் கே.எஸ்.நரேந்திரன், நாராயணன் திருப்பதி, எம்.நாச்சியப்பன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இக்குழுவின் கீழ் 38 துணை அமைப்புகள் அமைக்கப்பட்டு, அவற்றுக்கான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தி.தேவநாதன், புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், பாஜக மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் ஆகியோர் பேசினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு நிகழ்ச்சி பல்லடம் அருகே மாதப்பூரில் பிப்.25-ம் தேதி நடைபெறவுள்ளது. அங்கு 5 லட்சம் இருக்கை, 10 லட்சம் பங்கேற்பாளர்கள் என பிரம்மாண்டமாக நடத்த இருக்கிறோம். வேலூர் தொகுதி வேட்பாளர் பெயரை நான் அறிவிக்கவில்லை. ஏ.சி.சண்முகம் எவ்வாறு மக்கள் பணி செய்கிறார், வெற்றிபெற்ற கதிர் என்ன செய்திருக்கிறார் என்பதை மட்டுமே கூறினேன். தமிழகத்தில் அதிக எம்.பி.க்களையும் வாக்கு சதவீதத்தையும் பாஜக பெறும்.

கோயிலை வைத்து அரசியல் செய்யவில்லை. யாரையும் கூட்டணி பேசுமாறு பாஜக சொல்ல வில்லை. தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அனைவருடனும் பரஸ்பர நட்பு கொண்டிருக்கிறார். ராமர் கோயில் நிகழ்ச்சிக்கு பிரதமர் சென்றாலும் தவறு, செல்லாவிட்டாலும் தவறு என்கிறார் திருமாவளவன். அமைச்சர் உதயநிதி, தமிழக கோயில் கும்பாபிஷேகங்களுக்கு ஏன் சங்கராசாரியார்களை அழைக்கவில்லை என்பதை தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், தமிழக பாஜக தேர்தல் இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மூத்த நிர்வாகி ஹெச்.ராஜா, எம்எல்ஏக்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டே, மாநில நிர்வாகிகள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி, கராத்தே தியாகராஜன், லலிதா குமாரமங்கலம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Loading

About Admin

Check Also

“தேர்தல் பத்திர பிரச்சினையை திசைதிருப்பவே சிஏஏ அமல்” – செல்வப்பெருந்தகை

சென்னை: தேர்தல் நன்கொடை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பை திசைத் திருப்பவே குடியுரிமை திருத்த சட்ட அமலாக்க அறிவிப்பை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *