Breaking News
Home / செய்திகள் / திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டியவை குறித்து கடிதம், மெயில், வாட்ஸ்அப்பிலும் தெரிவிக்கலாம்

திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டியவை குறித்து கடிதம், மெயில், வாட்ஸ்அப்பிலும் தெரிவிக்கலாம்

சென்னை: மக்களவை தேர்தலை முன்னிட்டு, திமுகவில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழு, தேர்தல் பணி ஒருங்கிணைப்பு குழு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு என 3 குழுக்கள் கடந்த ஜனவரி 18-ம் தேதி அமைக்கப்பட்டன.

இதில், கனிமொழி எம்.பி. தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் டிகேஎஸ் இளங்கோவன், ஏகேஎஸ் விஜயன், அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், டிஆர்பி ராஜா, வர்த்தகர் அணி துணை தலைவர் கோவி.செழியன், கேஆர்என் ராஜேஷ்குமார் எம்.பி. மாணவர் அணி செயலாளர் சிவிஎம்பி எழிலரசன், அயலக அணி செயலாளர் எம்.எம்.அப்துல்லா, மருத்துவ அணி செயலாளர் எழிலன், சென்னை மேயர் பிரியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

முதலில், பொதுமக்களிடம் கருத்து கேட்டு அதன் அடிப்படையில் தேர்தல் அறிக்கை தயாரிக்க இக்குழு முடிவெடுத்தது. அதன்படி, ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற பெயரில் தூத்துக்குடியில் நேற்று கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, கன்னியாகுமரி, மதுரை, சேலம், கோவையிலும் நடத்தப்பட உள்ளது.

இது மட்டுமின்றி, பொதுமக்கள், வணிகர்கள், தொழில் துறையினரின் கருத்துகள், கோரிக்கைகள், பரிந்துரைகளை எழுத்து வடிவிலும் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அறிவாலயம் அலுவலகத்துக்கு கடிதம் மூலமாகவோ, dmkmanifesto2024@dmk.in என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம். அதுபோல, 08069556900 என்ற ஹாட்லைன் தொலைபேசி எண், எக்ஸ் தளத்தில் #DMKManifesto2024 என்ற ஹேஷ்டேக், DMKManifesto2024 என்ற முகநூல் பக்கம், 9043299441 என்ற வாட்ஸ்அப் எண் மூலமாகவும் அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரத்யேக க்யூஆர்கோடு குறியீடும் தரப்பட்டுள்ளது.

இந்த வசதிகள் கடந்த 3-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், பலரும் தங்கள் கருத்துகளை அனுப்பி வருகின்றனர். இந்த வசதி பிப்ரவரி 25-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்பிறகு பெறப்படும் பரிந்துரைகளையும் திமுக அறிக்கை குழு ஆய்வு செய்து, அதிகாரப்பூர்வ தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

Loading

About Admin

Check Also

“தேர்தல் பத்திர பிரச்சினையை திசைதிருப்பவே சிஏஏ அமல்” – செல்வப்பெருந்தகை

சென்னை: தேர்தல் நன்கொடை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பை திசைத் திருப்பவே குடியுரிமை திருத்த சட்ட அமலாக்க அறிவிப்பை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *