சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு கடினமாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர். தமிழக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகள் மற்றும் இன்னும் பிறதுறை சார்ந்த பள்ளிகளில் 2,582 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான நேரடி நிய மன அறிவிப்பைஆசிரியர் தேர்வு வாரியம் கடந்தஆண்டு வெளியிட்டது. இந்த தேர்வில் பங்கேற்க மாநிலம் முழுவதும் 41,485 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இதைத் தொடர்ந்துபட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு மாநிலம்முழுவதும் 130 மையங்களில்நேற்று நடைபெற்றது. சென்னையில் 8 மையங்களில் நடைபெற்ற தேர்வில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களுக்கு காலை 8 மணிக்கே வருகைதந்தனர்.
தேர்வர்களை ஒரே வரிசையில் நிற்க வைத்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தீவிர சோதனைக்கு பிறகு தேர்வு மையங்களுக்குள் அனுமதித்தனர். காலை 10 மணிக்கு பட்டதாரி ஆசிரியர் தேர்வு தொடங்கியது. தேர்வின் முதல்பகுதியில் 30 கேள்விகள் உள்ளடங்கிய தமிழ் மொழி தகுதித் தேர்வு,50 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடம்சார்ந்த தேர்வுகள் 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்டது. தேர்வில் பங்கேற்றவர்களிடம் வினாத்தாள் குறித்து கேட்டபோது, சற்று கடினமாக இருந்ததாகவும், குறுகிய நேரத்தில் பதில் அளிக்கக் கூடியவகையில் வினாக்கள் இடம் பெறவில்லை என்றும் தெரிவித்தனர்.