Breaking News
Home / செய்திகள் / தமிழக வெற்றி கழகம்: நடிகர் விஜய்யின் அரசியல் கட்சியின் பெயர் அதிகாரபூர்வ அறிவிப்பு

தமிழக வெற்றி கழகம்: நடிகர் விஜய்யின் அரசியல் கட்சியின் பெயர் அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: டெல்லியில் உள்ள இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு நடிகர் விஜய்யின் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சென்றிருக்கும் நிலையில், தமிழக வெற்றி கழகம் என்று கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாக நடிகர் விஜய் அதிகாரபூர்வமாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வர இருக்கிறார் என கூறப்படும் சூழலில், அவரது மக்கள் இயக்கத்தினர் தொடர்ச்சியாக பல்வேறு நலத்திட்டப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, அண்மையில் பெருமழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்கள், பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதற்கிடையே அவ்வப்போது கட்சிக்கான அணிகளும் அமைக்கப்பட்டு, தொடர்ச்சியாக நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், கடந்த ஜன. 26ம் தேதி பனையூரில் உள்ள அலுவலகத்தில் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுக்குழு உறுப்பினர்களுடன் திடீர் ஆலோசனை மேற்கொண்டார். வழக்கமாக கட்சி தொடங்கலாமா? மக்களிடையே நமது செல்வாக்கு எவ்வாறு உள்ளது? என்பது தொடர்பாக நிர்வாகிகளிடம் விஜய் கருத்துகளைக் கேட்டறிவார். ஆனால் ஜன.26-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் கட்சியைத் தொடங்க வேண்டும் என உறுதியான முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, ஏற்கனவே மக்களவைத் தேர்தலுக்கு தயாராகும் பொருட்டு விஜய் கட்சி ஆரம்பிக்க உள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில் இன்று டெல்லியில் உள்ள இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சென்றார். கட்சியின் பெயரைப் பதிவு செய்யும் பொருட்டு புஸ்ஸி ஆனந்த் தேர்தல் ஆணையத்துக்கு சென்றார் என்று தகவல் வெளியானது. நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதையும், கட்சி தொடங்குவதையும் இதுவரை வெளிப்படையாக எங்கும் அறிவிக்கவில்லை.

முதல்முறையாக, தமிழக வெற்றி கழகம் என்று கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாக நடிகர் விஜய் அதிகாரபூர்வமாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த நிகழ்வு தமிழக அரசியல் களத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Loading

About Admin

Check Also

“தேர்தல் பத்திர பிரச்சினையை திசைதிருப்பவே சிஏஏ அமல்” – செல்வப்பெருந்தகை

சென்னை: தேர்தல் நன்கொடை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பை திசைத் திருப்பவே குடியுரிமை திருத்த சட்ட அமலாக்க அறிவிப்பை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *