சென்னை: தூய்மைப் பணியாளர்கள் சரிவரபணியாற்றாததால் பல வார்டுகளில் குப்பை தேங்கியுள்ளதாக மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார் தெரி வித்துள்ளனர். சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில், துணைமேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் 35-வது வார்டு மதிமுக கவுன்சிலர் ஜீவன் பேசியதாவது: சென்னையில் 2023-ல் புயல்,பெருமழை என 2 நாட்களில் 58செமீ மழை பெய்துள்ளது. உயிர்ச்சேதம் குறைவு. 72 மணி நேரத்திலேயே இயல்புநிலை திரும்பியது. மாநகராட்சியின் சிறப்பாகநடவடிக்கையால் மாநகரம் விரைவாக மீண்டது.
மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளுவர் படத்தை வரைந்தவர் வேணுகோபால் சர்மா. அவர் திருவல்லிக்கேணி பெசன்ட் சாலையில்தான் வாழ்ந்தார். அந்த சாலைக்கு’ஓவியப் பெருந்தகை வேணுகோபால் சாலை’ என பெயரிட வேண்டும்.
இல்லாவிட்டால் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலைக்கு அவர் பெயரை வைக்கவேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர், வரிசெலுத்துவோர் அனைவருக்கும் ரூ.6 ஆயிரம்நிவாரணம் வழங்க வேண்டும்என்று அரசாணை பிறப்பிக்கப் பட்டுள்ளது. அதன்படி அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு பதில் அளித்த ஆணையர் ராதாகிருஷ்ணன், ‘‘உரிய களஆய்வு செய்து தகுதியுள்ள 2.3 லட்சம் விண்ணப்பங்கள் ஆட்சியர்,தமிழ்நாடு மின்னாளுமை முகமைவழியாக வருவாய் நிர்வாகஆணையருக்கு அனுப்பப்பட்டுள் ளன’’ என்றார்.
107-வது வார்டு விசிக கவுன்சிலர் கிரண் ஷர்மிலி பேசும்போது,‘‘பெரும்பாலான மண்டலங்களில்தூய்மைப்பணி தனியார்மயமாக் கப்பட்டதால், அங்கு பணிபுரிந்தவயது முதிர்ந்த நிரந்தர தூய்மைப்பணியாளர்கள் அனைவரும்அண்ணாநகர் மண்டலத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் இடம்பெற்றுள்ள எங்கள் வார்டில் வயது முதிர்ந்த பணியாளர்கள் வேலையே செய்வதில்லை. அதனால் வார்டின் தூய்மை கேள்விக்குறியாகி உள்ளது.
ஆவணங்களில் உள்ள வயதுக்கும், அவர்களின் உண்மையான வயதுக்கும் பொருத்தம் இல்லாமல் உள்ளது. எனவே இவர்களைநீக்கிவிட்டு, தற்காலிகப் பணியாளர்களை நியமித்து எங்கள் வார்டின் தூய்மையை உறுதி செய்ய வேண்டும்’’ என்றார்.
இதேபோல், பல கவுன்சிலர்கள், தங்கள் வார்டிலும் இதேநிலை நிலவுவதாக தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்த மேயர்பிரியா, ‘‘60 வயதைக் கடந்தது உறுதி செய்யப்பட்டால், அவர்களை ஓய்வில் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
வளசரவாக்கம் மண்டலக்குழு தலைவர் நொளம்பூர் வே.ராஜன் பேசும்போது, ‘‘அம்மா உணவகஊழியர்களுக்கு நாளொன்றுக்கு நீண்ட காலமாக ரூ.300 ஊதியம் வழங்கப்படுகிறது. இதை உயர்த்தவேண்டும். அம்மா உணவகங்களில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகின்றன. அவர்கள் மீதுநடவடிக்கை எடுக்கப்படுவதில்லை’’ என்றார்.
இதற்கு பதில் அளித்த மேயர்,‘‘அம்மா உணவகத்தில் எந்த மாற்றமும் செய்யாமல் வழக்கம் போலவே இயக்குமாறு முதல்வர்அறிவுறுத்தியுள்ளார். அதேநேரம்,இதுபோன்ற முறைகேடுகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
நிலைக்குழுத் தலைவர் (கணக்கு) தனசேகரன் பேசும்போது, ‘‘அதிமுக ஆட்சிக் காலத்தில் நட்சத்திர ஓட்டல்களில் சொத்து வரி 50 சதவீதம் வரைகுறைத்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்’’ என்றார்.
துணை மேயர் மகேஷ்குமார், ‘‘நட்சத்திர ஓட்டல்கள், தனியார் வணிக வளாகங்கள், தனியார் மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகள் முறையாக வரி செலுத்துகின்றனவா என அள வீடு செய்ய வேண்டும்’’ என்றார்.
34 தீர்மானங்கள் நிறைவேற்றம்: தொடர்ந்து, மெரினா வளைவு சாலை அருகில் அமையவுள்ள மீன் அங்காடிக்கு ரூ.4 கோடியில் சுற்றுச்சுவர், காவலாளிக்கு அறைஉள்ளிட்டவை அமைக்க ஒப்பந்தங்கள் கோர நிர்வாக அனுமதிவழங்கும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
10 மண்டலங்களில் தெருமின்விளக்குகளை பராமரிப்பதற்கான ஒப்பந்தம் 3 ஆண்டுகளுக்கு வழங்குவது தொடர்பான தீர்மானத்துக்கு பல்வேறு கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து அந்த ஒரு தீர்மானம் தவிர இதர 34 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.