சென்னை: சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் ரூ.30.5 கோடி மதிப்பீட்டில் அதிநவீன உபகரணங்களுடன் 10 உயர் சிறப்பு அறுவை சிகிச்சை அரங்கம், 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் 70 குளிரூட்டப்பட்ட தனி அறைகள் ஆகியவற்றை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார். சுகாதாரத் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை இயக்குநர் பார்த்தசாரதி, ஒருங்கிணைப்பு அலுவலர் மருத்துவர் ரமேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை 6 தளங்களுடன் 6 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையை 2023-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி முதல்வர் திறந்து வைத்தார். இம்மருத்துவமனையின் கட்டிடப் பணிகளுக்கு ரூ.380 கோடி செலவு செய்திருந்தாலும், அதிநவீன தொழில்நுட்ப உபகரணங்களையும் சேர்த்து இதுவரை ரூ.452 கோடி செலவிடப்பட்டுள்ளது.
1000 படுக்கைகளுடன் கூடிய இம்மருத்துவமனையில், சிறுநீரகவியல், இதயவியல், இரைப்பை குடலியல், நரம்பியல், நரம்பு அறுவை சிகிச்சை, புற்றுநோயியல், மயக்க மருந்தியல், நுண்ணுயிரியல், உயிர் வேதியியல் என்று 19 சிறப்பு சிகிச்சைத் துறைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. 20 அதிநவீன டயாலிசிஸ் இயந்திரங்கள், 4000 லிட்டர் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் உள்ளன.
மருத்துவமனை தொடங்கிய 6 மாதகாலத்தில் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவரை 1,05,198 புறநோயாளிகளும் 20,021 உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்றுள்ளனர். தினமும் சுமார் 800 புறநோயாளிகளும், 200 உள்நோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனர். இதுவரை 2,649 சி.டி. ஸ்கேன் பரிசோதனைகள், 749 எம்ஆர்ஐ பரிசோதனைகள், 821 எண்டோஸ்கோப்பி பரிசோதனைகள், 2,413 டயாலிசிஸ் சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.
தொடங்கப்பட்ட 6 மாத காலத்திலேயே 792 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்ட நாட்டின் முதல் மருத்துவமனையாக இந்த மருத்துவமனை திகழ்கிறது. அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் மருத்துவமனையில் நிறுவப்பட்டு வருகின்றன. இந்தியாவில் வேறு எந்த அரசு மருத்துவமனையிலும் இல்லாத புதிய வசதியாக டபுள் பலூன் எண்டோஸ்கோப்பி, ஆட்டோஎம்ஆர்ஐ போன்ற அதிநவீன கருவிகளும் உள்ளன. ரூ.6.74 கோடி மதிப்பீட்டில் அதிநவீன இருதய கேத்லேப் ஆய்வகம் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இந்த மருத்துவமனையில் தற்போது 70 தனி அறைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. அதிநவீன தொழில்நுட்ப கருவிகளைக் கொண்டு தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு இணையாக இந்த அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு ரூ.1200, ரூ.2000, ரூ.3000 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதி, ஆக்ஸிஜன் மானிட்டர், செவிலியரை அழைக்கும் வசதிகள் இந்த அறைகளில் உள்ளன. இதுவரை 2 அறுவை அரங்குகளில் மட்டுமே 792 அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன.
தற்போது கூடுதலாக 10 அறுவை சிகிச்சை அரங்குகள், 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை அறைகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. கூடுதல் சிறப்பாக மூளை நரம்பியல் அறுவை சிகிச்சைக்கு பிரத்யேகமாக 3டி அறுவை சிகிச்சை மைக்ரோஸ்கோப் ஒன்றும் இங்கே பொருத்தப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனைக்கு சென்னையிலிருந்து மட்டும் நோயாளிகள் வருவதில்லை. கடலூர், விழுப்புரம் என்று பல்வேறு மாவட்டங்களிலிருந்து நோயாளிகள் வந்து சிகிச்சை பெறுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.