சென்னை: மக்களவைத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவாா்த்தை நடத்துவது தொடர்பாக அதிமுக ஆலோசனை நடத்தியது.
மக்களவைத் தேர்தல் தொடங்க சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. அந்தவகையில் அதிமுக சார்பில் மக்களவைத் தோ்தலில் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவாா்த்தை நடத்துவதற்காக கே.பி.முனுசாமி தலைமையில் 5 போ் கொண்ட குழுவை அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி அமைத்துள்ளார். இக்குழு இன்று ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தியது.
முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, பெஞ்சமின் ஆகியோர் இந்த ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது, எந்தெந்தக் கட்சிகளைப் பேச்சுவாா்த்தைக்கு அழைக்கலாம் என்பது தொடா்பாக தொகுதிப் பங்கீட்டு குழுவினா் ஆலோசித்தனர். அதன்படி, விரைவில் அக்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோல் அதிமுகவின் விளம்பரக் குழு, பிரச்சாரக் குழுவைச் சேர்ந்தவர்களும் மக்களவைத் தேர்தலை சந்திப்பு தொடர்பாக ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் கூடி ஆலோசனை நடத்தினர்.
இதனிடையே, அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் தமிழகம் முழுவதும் மண்டல வாரியாக சுற்றுப்பயணம் செய்து தேர்தல் அறிக்கையை தயாரிக்கவுள்ளது. இதற்காக அந்தக் குழுவினரின் சுற்றுப்பயண விவரங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சுற்றுப்பயணங்களை மாற்றி அமைத்து அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.