சென்னை: டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோக்கோவிச்சை தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்தித்துள்ளார். தமிழகத்தை, 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளதார மாநிலமாக உயர்த்தும் வகையில், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் சென்றுள்ளார். நேற்று அவரை சென்னையில் இருந்து விமான நிலையத்தில் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் வழியனுப்பி வைத்தனர்.
அதன்படி ஸ்பெயின் நாட்டின், மேட்ரிட் சென்றடைந்த முதல்வர் மு.க. ஸ்டாலினை ஸ்பெயின் நாட்டிற்கான இந்தியத் தூதர் தினேஷ் கே. பட்நாயக் மலர்கொத்து வழங்கி வரவேற்றார். இதற்கிடையே, டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோக்கோவிச்சை தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்தித்துள்ளார். அரசுமுறை பயணமாக ஸ்பெயின் செல்லும்போது நோவக் ஜோக்கோவிச்சை முதல்வர் ஸ்டாலின் சந்தித்துள்ளார். அப்போது ஜோக்கோவிச் உடன் எடுத்த புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
இதேபோல் மற்றொரு பதிவில், “ஸ்பெய்ன் வந்தடைந்தேன். ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக ஐரோப்பியப் பயணம். ஸ்பெய்னுக்கான இந்திய தூதர் தினேஷ் தூதரக அதிகாரிகளுடன் சிறப்பான வரவேற்பை அளித்தார். இன்று மாலை ஸ்பெய்ன் நாட்டின் தொழில் அமைப்புகள் மற்றும் அந்நாட்டில் செயல்படும் பெரும் தொழில் நிறுவனங்களைச் சந்திக்கிறேன். தமிழ்நாட்டில் நிலவும் வாய்ப்புகள் மற்றும் இளைஞர் வளத்தை எடுத்துக்கூறி முதலீடுகளை ஈர்க்கவுள்ளேன்.” இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அரசு முறை பயணம்… முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு அரசு முறை பயணமாக வெளிநாடு புறப்படும் முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம், “ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை எட்டும் முயற்சியில் 2024-ம் ஆண்டு தொடக்கமே உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் வெற்றியாக அமைந்தது. அதனை தொடர்ந்து 8 நாட்கள் பயணமாக ஸ்பெயின் செல்கிறேன்.
பிப்ரவரி 7-ம் தேதி காலை சென்னை திரும்புகிறேன். கடந்த 2022-ம் ஆண்டு தொழில் முதலீடுகளை ஈர்க்க ஐக்கிய அரபு நாடுகளுக்கு சென்றிருந்தேன். அந்த பயணத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய ரூ.6,100 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 2023-ம் ஆண்டு மே மாதம் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சென்றதில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய ரூ.1,342 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு வேகமாக செயல் வடிவம் கொடுத்ததால் பல நிறுவனங்கள் தங்களுடைய தொழிற்சாலைகளை தமிழகத்தில் நிறுவ தொடங்கியுள்ளன. ஜப்பான், சிங்கப்பூரை போலவே ஸ்பெயின் நாட்டிலும் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த இருக்கிறேன்.
இதில், ஸ்பெயின் நாட்டை சேர்ந்த முதலீட்டாளர்கள், வணிக அமைப்புகள், தொழில்முனைவோர் மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர். இந்த மாநாட்டில் தமிழகத்தில் நிலவும் சாதகமான முதலீட்டு சூழல், கட்டமைப்பு, மனிதவளம் போன்ற சிறப்புகளை எடுத்துக்கூறி, இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்ள தமிழகம் தான் உகந்த மாநிலம் என்று அந்நாட்டு முதலீட்டாளர்களுக்கு எடுத்துரைக்க இருக்கிறேன்.
இந்த பயணத்தில் பெரும் நிறுவனங்களுடன் நேரடி பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படவுள்ளது. ஐரோப்பிய நாடுகளின் முதலீடுகளை பெறுவதற்கான அனைத்து முயற்சிகளும் இந்த பயணத்தின்போது எடுக்கப்படும்.” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.