சென்னை: இந்திய சந்தையில் விலை உயர்ந்த மின்சார வாகனமாக ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் ‘ஸ்பெக்டர் இவி’ (Spectre EV) வாகனம் அறிமுகமாகி உள்ளது. இந்த வாகனத்தின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம்.
1906-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம். இங்கிலாந்தை தலைமையகமாக கொண்டு இயங்குகிறது. உலக அளவில் சொகுசு கார்களை விற்பனை செய்து வருகிறது இந்நிறுவனம். கடந்த 2005 முதல் இந்த நிறுவனத்தின் ஆண்டு வாரியான கார் விற்பனை படிப்படியாக அதிகரித்து வந்துள்ளது. அந்த வகையில் கடந்த 2023-ல் மொத்தமாக 6,032 கார்களை ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் விற்பனை செய்திருந்தது.
தற்போது ஃபேண்டம், கோஸ்ட், Cullinan மாடல் கார்களை சர்வதேச சந்தையில் விற்பனை செய்து வருகிறது. இந்த சூழலில் Spectre EV எனும் காரை அறிமுகம் செய்தது. இது ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முதல் ஆல் எலெக்ட்ரிக் கார். வழக்கம் போலவே சொகுசு கார்களின் வரிசையில் இது இணைந்துள்ளது.
இதன் WLTP ரேஞ்ச் 517 கிலோமீட்டர். அன்றாட பயன்பாட்டில் இருந்து உலகெங்கிலும் உள்ள கடுமையான தட்பவெப்ப நிலைகள் வரை இந்த கார் டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது. -40 டிகிரி வெப்பநிலையில் இந்த கார் சோதனை செய்யப்பட்டுள்ளதாக தகவல். 102kWh பேட்டரி பேக்கை கொண்டுள்ளது. இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார் கொண்டுள்ளது. அது கூட்டாக இணைந்து 585 ஹெச்பி-யை தயாரிக்கும். 2,890 கிலோ கிராம் எடை கொண்ட இந்த வாகனம், 4.5 நொடிகளில் 100 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 வீல் ஸ்டீயரிங், ஆல்-அலுமினியம் ஸ்பேஸ் ஃப்ரேமில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆக்டிவ் சஸ்பென்ஷனை கொண்டுள்ளது. வரும் 2030-க்குள் ரோல்ஸ் ராய்ஸ் தயாரிக்கும் அனைத்து கார்களும் மின்சார சக்தியில் இயங்கும் வகையில் இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் முதல் படியாக Spectre EV வெளிவந்துள்ளது. 100 கிலோமீட்டர் தூரம் செல் 21.5 kWh சக்தி தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.7.50 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வரும் 23-ம் தேதி இந்த வாகனம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.