சென்னை: இலங்கை வரலாற்றில் இதுவரை நடக்காத சரித்திர சாதனை இப்போது நடந்துள்ளது. முதன்முறையாகத் தமிழக அகதிகள் மறுவாழ்வு முகாம்களில் வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு ‘சிறப்பு பாஸ்போர்ட்’ வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் வாழ்ந்துவந்த தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கும் இடையே 1982 ஆண்டு மிகப்பெரிய கலவரம் வெடித்தது. அதன் விளைவாக இலங்கையில் வாழ்ந்துவந்த தமிழர்கள் பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக வெளியேறினர்.
நார்வே, கனடா, ஆஸ்திரேலியா, ஃபிரான்ஸ் ஆகிய நாடுகளில் தஞ்சமடைந்த தமிழர்கள் நாளடைவில் அந்நாட்டுக் குடியுரிமைப் பெற்று அங்கேயே வாழத் தொடங்கி விட்டனர்.
அங்குள்ள தமிழர்களுக்கு அனைத்து விதமான குடியுரிமை சுதந்தரமும் அளிக்கப்பட்டது. ஆனால், இந்தியாவில் தஞ்சமடைந்த இலங்கைத் தமிழர்கள் முகாம்களில் குடியமர்த்தப்பட்டனர். சுதந்தரமாக நடமாடும் உரிமை அவர்களுக்கு மறுக்கப்பட்டது. முழு நேரக் கண்காணிப்பில் அவர்கள் வாழ்ந்து வந்தனர்.
இந்தியாவிற்கு வந்து 40 ஆண்டுகள் ஆகியும் அவர்களுக்கு முறையாகக் குடியுரிமை அளிக்கப்படவில்லை. இந்தியச் சட்டம் அதற்கு அனுமதிக்கவும் இல்லை. இதனால் ஈழத் தமிழ் அகதிகளின் எதிர்காலம் முடங்கிப் போய் இருந்தது.
திமுக அரசு பொறுப்பேற்றது முதல் இலங்கைத் தமிழர் நலனில் அதிக அக்கறை காட்டத் தொடங்கியது. அவர்கள் முகாம்களிலிருந்து வெளியேற்றப்பட்டு நல்ல குடியிருப்பு பகுதிகளில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
இதற்காக ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்ற உடனேயே இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்காக ரூ.317 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார்.
அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள முகாம்களில் வாழ்ந்து வந்த இலங்கைத் தமிழர்களுக்காக 1591 வீடுகளை சுமார் ரூ.79.70 கோடியில் கட்டி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும் திண்டுக்கல்லில் ரூ.18 கோடியில் குடியிருப்புகளைத் திறந்து வைத்தார். இப்போது இலங்கைத் தமிழர்களின் வாழ்வில் வரலாற்றிலேயே இல்லாத மாபெரும் மாற்றம் இப்போது நடந்துள்ளது.
நாடு அற்றவர்களாகத் தமிழ்நாட்டு மறுவாழ்வு முகாம்களில் இலங்கைத் தமிழர்களுக்குத் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட முயற்சியின் மூலம் முதற்கட்டமாக 200 பேர் பாஸ்போர்ட் பெற்றுள்ளனர்.
சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தில் முதற்கட்டமாக ஈழத்தமிழர்களுக்குச் சிறப்பு பாஸ்போர்ட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொடண்டமான், தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு பாஸ்போர்ட் வழங்கினர்.
“இப்போது 200 பேருக்கு பாஸ்போர்ட் வழங்கி இருக்கிறோம். மேலும் இது விரிவுபடுத்தப்படும்” என்கிறார்
இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான், “ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் தமிழ்நாட்டில் கடந்த 40 ஆண்டுகளாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இவர்களின் எதிர்காலம் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகவே இருந்தது.
பல காலமாகத் திரும்பவும் இலங்கைக்கு வந்துவிடலாம் எனப் பல முயற்சிகளை மேற்கொண்டார்கள். அதைப்போல வெளிநாடுகளில் உள்ள அவர்களின் உறவினர்களுடன் சேர்ந்து வாழவும் முயற்சி எடுத்தார்கள். எதுவும் அவர்களுக்குச் சரியாக அமையவில்லை.
இந்தியக் குடியுரிமை வேண்டித் தொடர்ந்து போராடினார்கள். இந்தியச் சட்டப்படி அவர்களுக்குக் குடியுரிமை வழங்கமுடியாத சூழல் இருந்தது. ஆகவே, இலங்கையில் ஆட்சி செய்த பல அதிபர்களிடம் நாங்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தோம். அந்தக் கோரிக்கைகளில் நடைமுறைப்படுத்தப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டன.
இப்போது உள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நான் ஆளுநராகப் பொறுப்பேற்ற உடன் மீண்டும் கோரிக்கைவைத்தேன். கனடா, ஆஸ்திரேலியா, நார்வே சென்றவர்கள் அந்தந்த நாட்டின் குடியுரிமையைப் பெற்றுவிட்டார்கள்.
இந்தியாவில் வசித்து வந்த 1 லட்சத்திற்கும் மேலான இலங்கைத் தமிழர்களின் எதிர்காலத்தை நல்ல விதமாக அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பது மிகப்பெரிய கடமையாக இருந்தது.
இப்போது அவர்களின் வாழ்வில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தித் தந்துள்ளோம். இலங்கை வரலாற்றிலேயே முதன்முறையாக ‘இலங்கை அனைத்து நாடுகளுக்கான கடவுச்சீட்டு’ அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் எப்படி இந்தியப் பிரஜைகள் வாழ்கிறார்களோ, இலங்கையில் எப்படி இலங்கை பிரஜைகள் வாழ்கிறார்களோ அதைப்போன்று இந்த இந்திய இலங்கைத் தமிழர்களும் அவர்கள் விரும்பும் நாட்டிற்குச் செல்லலாம். அங்கேயே தங்கி பணிபுரியலாம்.
இந்தியாவில் உள்ள இலங்கை அகதி மறுவாழ்வு முகாம்களில் வாழும் 1 லட்சத்திற்கும் மேலான தமிழர்களுக்கு மிகப் பெரிய விடிவுகாலம் கிடைத்துள்ளது.
இதற்காக உதவிய முதல்வர் ஸ்டாலினுக்கும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் தூதரக அதிகாரிகளுக்கும் நன்றி” என்கிறார்