சென்னை: சேலத்தில், மாற்றுத் திறனாளிகள் துறை சார்பில் ரூ.6.70 கோடியில் கட்டப்பட்ட பள்ளிக்கட்டிடத்தை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ஓசூர் மருத்துவமனையை ரூ.100 கோடியில் தரம் உயர்த்தும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தலைமைச் செயலகத்தில், சுகாதாரத்துறை சார்பில் ஓசூர் மருத்துவமனையை, மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்திரூ.100 கோடி மதிப்பீட்டிலான கட்டுமானப் பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலியில் அடிக்கல் நாட்டினார்.
மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் செவி மாற்றுத்திறன் மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டுக்காக சேலம் மாவட்டம்,ஏற்காடு அடிவாரம், கொண்டப்பநாயக்கன்பட்டியில் ரூ. 6.70 கோடிசெலவில் கட்டப்பட்டுள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கான புதியகட்டிடத்தை முதல்வர் காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.இப்பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர் தடையற்ற சூழலுடன் கல்வி பயில்வதற்கு ஏதுவாக, அனைத்து அறைகளிலும் ஒளிரும் விளக்குகள், வழிகாட்டி பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன.
பணி நியமனம்: மேலும், இந்து சமய அறநிலையத்துறையின் சார்நிலைப் பணியில் செயல் அலுவலர் நிலை-3 பணியிடத்துக்கு தேர்வு செய்யப்பட்ட 64 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 6 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் முதல்வர் வழங்கினார்.
அதேபோல், மிக்ஜாம் புயல்,தென் மாவட்டங்களில் பெய்த அதி கனமழையின் போது சிறப்பாக பணியாற்றிய ‘108’ அவசரகால ஊர்தி பணியாளர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.
இதில், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.