சென்னை: குறு, சிறு, தொழில் துறையில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ரூ.63 ஆயிரம் கோடி புதிய முதலீடுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளோம். 5.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைஅமைச்சர் தா.மோ.அன்பரசன், மத்திய அரசின் ‘ஸ்டார்ட் அப் இந்தியா’ வெளியிட்ட 2022-ம் ஆண்டுக்கான தரவரிசைப்பட்டியலில் தமிழகத்துக்கு வழங்கப்பட்ட முதல் தரவரிசை பிரிவுக்கான ‘சிறந்த செயல்பாட்டாளர்’ சான்றிதழை காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: உலகளவில் தமிழகத்தை புத்தொழில்களின் மையமாக மாற்றவும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப புதிய கண்டுபிடிப்பாளர்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘ஸ்டார்ட் அப் தமிழ்நாடு’ என்ற துறையை உருவாக்கியுள்ளார். இந்த துறைக்கென இதுவரை இல்லாத அளவுக்கு, முதன்மை செயல் அலுவலரையும் நியமித்து, அவருக்கு கீழ் 40-க்கும் மேற்பட்ட திறமை மிக்க அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தொழில் நிறுவனங்களுக்கு நிதி: திமுக அரசு பொறுப்பேற்ற பின், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களுக்கு நிதி ஆதாரங்களை வழங்கும் ‘டான்சீட் திட்டத்தில், 2021-22-ம் ஆண்டு50 நிறுவனங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம், ரூ.5 கோடி ஒதுக்கினார். அதன்பின் கடந்த 2022-23-ம் ஆண்டில், 100 நிறுவனங்களுக்கு ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டு, வழங்கப்பட்டது. இந்த ஆதார நிதி, பசுமை தொழில்நுட்பம், மகளிர் ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள், தொழிலாளர்கள் புலம் பெயர்வதை தடுக்கும் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சத்தை ரூ.15 லட்சமாக உயர்த்தியுள்ளார். இதுவரை 132 நிறுவனங் களுக்கு, ரூ.13.95 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் முதல்முறையாக, சமூகத்தில் அனைத்து பிரிவினர் மத்தியிலும் தொழில்முனைவோர் உருவாக வேண்டும் என்பதற்காக எஸ்சி, எஸ்டி தொழில்முனைவோருக்கு ரூ.30 கோடி ஒதுக்கப்பட்டது. இந்தஆண்டில் அது ரூ.50 கோடியாக உயர்த்தப்பட்டது. இதுவரை 21 தொழில் முனைவோருக்கு ரூ.28.10 கோடி வழங்கப்பட்டுள்ளது. அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை 153 நிறுவனங்களுக்கு ரூ.42.05 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.
கல்லூரியில் படிக்கும் இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் இடையே புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும், அவற்றை சந்தைப்படுத்தவும் புத்தாக்க பற்றுச்சீட்டு திட்டத்தில் ரூ.2 லட்சம்முதல் ரூ.5 லட்சம் வரை நிதியுதவிவழங்கப்படுகிறது. அந்த வகையில், கடந்த 2 ஆண்டுகளில் 266 பேருக்கு ரூ.7.39 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. ‘ஸ்டார்ட் அப்’ தனிக் கொள்கையும் வெளி யிடப்பட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ‘ஸ்டார்ட் அப்’ தரவரிசையில் கடைசி இடத்தில் தமிழகம் இருந்தது. 2021-ல் 3-வது இடத்துக்கு முன்னேறி லீடர் விருது பெற்றது. 2022-ம் ஆண்டு நாட்டில் முதலிடத்தை பெற்றுள்ளது.
இதற்கு நிதி ஆதாரங்களுடன், பல்வேறு திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தந்ததுதான் காரணம். தற்போது தமிழகத்தில் 7,600 ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் உள்ளன. இதில் கடந்த 2022-ம் ஆண்டில் மட்டும் 2600 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 140-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பெண்களால் தொடங்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் பெரும் வளர்ச்சி பெற்று, உலகளவில் சிறந்த மாநிலமாக தமிழகம் வரும்.
சமச்சீரான தொழில் வளர்ச்சி ஏற்பட, தற்போது மண்டல அளவில் அதிகாரிகளை நியமித்துள்ளோம். அடுத்ததாக மாவட்ட அளவில் அதிகாரிகளை நியமித்து தொழில் வளர்ச்சி ஏற்படுத்தப்படும். தொழில்முனைவோர் எவ்வளவு பேர் வந்தாலும், அவர்களுக்கான ஆதார நிதி, உதவிகள் செய்யப்படும்.
குறு, சிறு, தொழில் துறையில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ரூ.63 ஆயிரம் கோடி புதிய முதலீடுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளோம். 5.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக் கும். இவ்வாறு அவர் கூறினார்.