சென்னை: தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறைய தொடங்கியுள்ளதாக தமிழக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் கடந்த சில மாதங்களாக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக, மழை பாதிப்புக்குள்ளான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வெள்ள மீட்பு பணிகளுக்கு பிறகு கொசுக்கள் மூலம் நோய் பரவாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுகாதார களப் பணியாளர்கள் கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இத்தகைய தொடர் நடவடிக்கைகளால், கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சலின் தாக்கம் குறைந்து வருகிறது. இந்த மாதத்தில் இதுவரை 922 பேருக்கு மட்டுமே டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய் பரவல் படிப்படியாக குறைந்துள்ளது.
கடந்த மாதத்தில் தினமும் சராசரியாக 80 பேருக்கு டெங்கு கண்டறியப்பட்டது. தற்போது அந்த எண்ணிக்கை 30 ஆக குறைந்துள்ளது. அடுத்த சில வாரங்களில் டெங்கு பாதிப்பு முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.