Breaking News
Home / செய்திகள் / மருத்துவத்தை தாண்டி உலகில் வரம்பற்ற வாய்ப்புகள் உள்ளன; மருத்துவ படிப்பை 3-ம் ஆண்டில் தொடர மாணவருக்கு உயர் நீதிமன்றம் அனுமதி மறுப்பு

மருத்துவத்தை தாண்டி உலகில் வரம்பற்ற வாய்ப்புகள் உள்ளன; மருத்துவ படிப்பை 3-ம் ஆண்டில் தொடர மாணவருக்கு உயர் நீதிமன்றம் அனுமதி மறுப்பு

சென்னை: மருத்துவக் கல்வியைத் தாண்டி உலகில் வரம்பற்ற வாய்ப்புகள் பல உள்ளன என கருத்து தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், நீட் தேர்வு மதிப்பெண் குளறுபடி காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மருத்துவம் படித்து வந்த கோவை மாணவர் மூன்றாமாண்டில் படிப்பைத் தொடர அனுமதி மறுத்து உத்தரவிட்டுள்ளனர்.

கோவையைச் சேர்ந்த மாணவரான மனோஜ் கடந்த 2020 செப்டம்பரில் நீட் தேர்வு எழுதினார். அந்த தேர்வுக்கான முடிவுகளை தேசிய தேர்வு முகமை அக்.16 அன்று வெளியிட்டது. திருத்தப்பட்ட ஓஎம்ஆர் விடைத்தாள்களை சரிபார்த்தபோது மனோஜ் 720 மதிப்பெண்களுக்கு 597 மதிப்பெண்கள் பெற்றது தெரியவந்தது.

அதன்பிறகு தேசிய தேர்வு முகமையின் இணையத்தில் மனோஜ் 248 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றுள்ளதாக இருந்தது. இதை எதிர்த்து மனோஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, இதுதொடர்பாக சிபிசிஐடி-யில் சைபர் க்ரைம் குற்ற வழக்குகளில் நிபுணத்துவம் பெற்ற போலீஸ் அதிகாரிகளைக் கொண்டு இந்த நீட் மதிப்பெண் பிரச்னை தொடர்பாக விசாரிக்க உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து தேசிய தேர்வு முகமை சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர்.

மேலும், தூத்துக்குடி மருத்துவ கல்லூரியில் மாணவர் மனோஜ் தனது படிப்பைத் தொடரலாம் என்றும், இந்த வழக்கில் தனி நீதிபதியே மீண்டும் முடிவெடுக்க வேண்டும், வழக்கின் முடிவுகள் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்றும் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த உத்தரவை எதிர்த்து தேசிய தேர்வு முகமை தாக்கல் செய்திருந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றமும், இதுதொடர்பாக தனி நீதிபதியே முடிவெடுக்க உத்தரவிட்டது.

அதன்படி இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, தேசிய தடயவியல் ஆய்வக அறிக்கையின்படி மாணவர் மனோஜ் நீட் தேர்வில் 248 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றுள்ளார் எனக்கூறி அவருடைய மருத்துவ மாணவர் சேர்க்கையை ரத்து செய்து கடந்தாண்டு உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து மூன்றாமாண்டில் மருத்துவப் படிப்பைத் தொடர அனுமதிகோரி மனோஜ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.

அப்போது நீதிபதிகள், நீட் தேர்வு மதிப்பெண் குளறுபடிக்கு இடையே மாணவர் மனோஜ் கடந்த 2 ஆண்டுகளாக தூத்துக்குடி மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பை நிறைவு செய்துள்ளார். மனுதாரர் பதிவிறக்கம் செய்த மதிப்பெண் தொடர்பான தகவல்கள் தவறானவை.

அவர் இரண்டு ஆண்டுகளை இழந்தது உண்மையிலேயே வருத்தமளிக்கிறது. அவர் நீட் தேர்வில் 153 கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். 27 கேள்விகளுக்கு விடை அளிக்கவில்லை. தவறாக விடையளித்த வினாக்களுக்கான மைனஸ் மதிப்பெண் போக 248 மதிப்பெண்கள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்த சூழலில் மனுதாரருக்கு நிவாரணம் வழங்க எந்தவொரு நியாயமான காரணத்தையும் கண்டறிய முடியவில்லை. ஆகவே அவருடைய மருத்துவ மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்படுகிறது.

அதேநேரம் மருத்துவப் படிப்பைத் தாண்டி உலகில் வரம்பற்ற வாய்ப்புகள் பல உள்ளன என்பதை மனுதாரர் கருத்தில் கொள்ள வேண்டும் எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

Loading

About Admin

Check Also

“தேர்தல் பத்திர பிரச்சினையை திசைதிருப்பவே சிஏஏ அமல்” – செல்வப்பெருந்தகை

சென்னை: தேர்தல் நன்கொடை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பை திசைத் திருப்பவே குடியுரிமை திருத்த சட்ட அமலாக்க அறிவிப்பை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *