சென்னை: அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ 1000 ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுவரை அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் திருத்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ 1000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, திராட்சை, முந்திரி, ஏலக்காய் வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையை அனைத்து தரப்பு மக்களும் கொண்டாட ஏதுவாக தமிழக அரசு சார்பில் அரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவற்றுடன் ரூ 1000 ரொக்கம் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பொங்கலுக்கு அரிசி அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு மற்றும் ரூ 1000 ரொக்கம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார்.
பொங்கல் ஜனவரி 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், 2 கோடிக்கும் மேற்பட்ட அரிசி அட்டைதாரர்களுக்கு முன்னதாகவே ரேஷன் கடைகளில் ரூ.1,000 மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், பொங்கல் தொகுப்புடன் இலவச வேஷ்டி, சேலையும் வழங்கப்பட உள்ளது.
இந்த நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறும் பயனாளிகளுக்கு வீடு, வீடாக சென்று டோக்கன் விநியோகம் செய்யும் பணியை ரேஷன் கடை ஊழியர்கள் தொடங்கினர். வரும் 10ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது. விடுபட்டவர்கள் 14 ஆம் தேதி அன்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெறலாம் என அறிவிக்கப்பட்டது.
மத்திய மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத் துறை பணியாளர்கள், சர்க்கரை அட்டைதாரர்கள்,எந்த பொருளும் பெறாத அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு கிடைக்காது என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த அறிவிப்பு தற்போது திருத்தியமைக்கப்பட்டுள்ளது.