Breaking News
Home / செய்திகள் / தைத்திருநாளை முன்னிட்டு 12,911 அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் சீருடைகள்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

தைத்திருநாளை முன்னிட்டு 12,911 அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் சீருடைகள்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

தைத்திருநாளை முன்னிட்டு 12,911 அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் சீருடைகள்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: தமிழகத்தில் தைத்திருநாளை முன்னிட்டு 12,911 அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் சீருடைகள் வழங்கப்படுகிறது என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை பாரிமுனை காளிகாம்பாள் கோயிலில் தமிழர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு சென்னை மண்டலத்தைச் சேர்ந்த 74 கோயில்களின் 128 அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், ஓதுவார்கள், பூசாரிகளுக்கு புத்தாடைகளையும், 339 பணியாளர்களுக்கு சீருடைகளையும் அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று வழங்கினார். பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: திமுக அரசு பொறுப்பேற்றபின், 2022ம் ஆண்டு தமிழ்நாடு முதல்வர் கோயில்களின் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களின் மேல் நலன்களை காக்கும் வகையில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு புத்தாடைகளையும், சீருடைகளையும் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து ஆண்டுதோறும் இரண்டு செட் புத்தாடைகள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தாண்டு 12,911 அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் சீருடைகள் வழங்குகின்ற நிகழ்ச்சியை காளிகாம்பாள் கோயிலில் தொடங்கி வைத்துள்ளோம். இதற்காக ரூ.1.49 கோடி செலவிடப்படுகிறது. இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு கோயில்களுக்கு திருப்பணி மேற்கொண்டு குடமுழுக்கு நடத்துதல், திருக்குளங்கள் மற்றும் திருத்தேர்களை புனரமைத்தல், திருக்கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்தல், நிலங்களை அளவீடு செய்து பாதுகாத்தல், வருவாய் இனங்களை பெருக்குதல் போன்ற பணி செய்யப்பட்டு வருகிறது. மேலும் அர்ச்சகர்களின் நலன் காக்கும் வகையில் அவர்களுக்கு குடியிருப்புகள், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், பொங்கல் கொடை, அர்ச்சகர், ஓதுவார் போன்ற பயிற்சி பள்ளிகளில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை போன்றவை வழங்கப்பட்டு வருகிறது.

நாளைய தினம் தமிழ்நாடு முதல்வர் ஓய்வு பெற்ற திருக்கோயில் பணியாளர்களுக்கு பொங்கல் கொடை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். கோயில்களில் அன்னதானத் திட்டம் விரிவாக்கம், நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம், கட்டணமில்லா திருமணங்கள், ராமேசுவரம் – காசி ஆன்மிக சுற்றுலா, விபூதி மற்றும் குங்குமம் உற்பத்தி மையங்கள், சித்தர்கள் மற்றும் சான்றோர்களுக்கு விழா நடத்துதல் என இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றிலே இல்லாத அளவிற்கு பல்வேறு புதிய திட்டங்களை உருவாக்கி ஆன்மிக புரட்சியை ஏற்படுத்துகின்ற ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி திகழ்கிறது. தமிழ்நாட்டிலேயே திருவள்ளுவருக்கென்று அமைந்திருக்கின்ற மயிலாப்பூர் திருவள்ளுவர் திருக்கோயில் ரூ.13 கோடி மதிப்பீட்டில் முழுவதுமாக புனரமைக்கப்பட்டு வருகிறது. மேலும், தமிழ் மூதாட்டி ஔவையாருக்கு நாகப்பட்டினம் மாவட்டம், துளசியாப்பட்டினத்தில் ரூ.17 கோடி மதிப்பீட்டில் மணிமண்டபம் அமைக்கப்பட்டு வருகிறது.

குன்றத்தூரில் இரண்டு நாட்கள் கொண்டாடப்பட்டு வந்த சேக்கிழார் விழாவினை மூன்று நாட்களாக மாற்றி சிறப்பாக கொண்டாடி வருகிறோம். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரலாறு காண அளவிற்கு பக்தர்கள் வருவதால் நீண்ட வரிசையில் அதிக நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்வது குறித்து முதல்வர் நேரடியாக தொடர்பு கொண்டு, பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பும் தரிசனத்திற்குண்டான ஏற்பாடுகளையும் நல்க வலியுறுத்தி இருக்கின்றார். எங்களையும் இதுதொடர்பாக கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டிருக்கின்றார். சபரிமலையில் பக்தர்கள் நலனை கருதி கேரளா அரசாங்கம் எடுத்து வருகின்ற நடவடிக்கைகள் துரிதமாகத்தான் இருக்கிறது. வருங்காலங்களில் இதுபோன்ற கூட்ட நெரிசல்களை கட்டுப்படுத்துவதற்கும் கேரள அரசு பல்வேறு திட்டங்களையும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது. அவற்றிற்கு தமிழ்நாடு அரசும் உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Loading

About Admin

Check Also

“தேர்தல் பத்திர பிரச்சினையை திசைதிருப்பவே சிஏஏ அமல்” – செல்வப்பெருந்தகை

சென்னை: தேர்தல் நன்கொடை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பை திசைத் திருப்பவே குடியுரிமை திருத்த சட்ட அமலாக்க அறிவிப்பை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *