சென்னை: போக்குவரத்துத் துறை அமைச்சருடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில், உடன்பாடு ஏற்படாவிட்டால் திட்டமிட்டபடி நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தொழிற்சங்கங்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன.
போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 19-ம் தேதி சிஐடியு, ஏஐடியுசி, டிடிஎஸ்எப் உள்ளடக்கிய 16 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸை வழங்கின. அதற்கடுத்த நாளே அண்ணா தொழிற்சங்க பேரவை தலைமையில் இயங்கும் கூட்டமைப்பு சார்பிலும் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதையடுத்து, பேச்சுவார்த்தைக்கு வருமாறு நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு தொழிலாளர் நலத்துறை அழைப்பு விடுத்தது. இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், ஜன.9-ம் தேதி வேலைநிறுத்தம் நடைபெறும் என தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவித்தன.
பொங்கலுக்குப் பின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணலாம் என போக்குவரத்துத் துறை அமைச்சரும் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், பணிமனைகளில் ஆர்ப்பாட்டம், மக்களை சந்தித்து ஆதரவு கோருதல் என வேலைநிறுத்தத்துக்கான பணிகளை தொழிற்சங்கங்கள் தீவிரப்படுத்தி வந்தன.
இதையடுத்து, வேலைநிறுத்தத்தைத் தவிர்க்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரை முதல்வர் அறிவுறுத்தினார். இதன்படி உடனடியாக தொழிற்சங்கங்களை அமைச்சர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். கடந்த 5-ம் தேதி நடைபெற்ற இப்பேச்சுவார்த்தையில் அகவிலைப்படி உயர்வு வழங்குதல் மற்றும் ஊதிய பேச்சுவார்த்தைக்கான தேதி அறிவிக்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தின. இதுதொடர்பாக நிதித்துறையுடன் ஆலோசிக்க வேண்டியிருப்பதால், பேச்சுவார்த்தை நேற்றைய தினத்துக்கு தள்ளிவைக்கப்பட்டது.
இதனிடையே, உலக முதலீட்டாளர் மாநாடு நேற்று தொடங்கியதால் பேச்சுவார்த்தை மீண்டும் தள்ளிவைக்கப்பட்டு, இன்றைய தினம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னை, பல்லவன் இல்லத்தில் காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ள இந்த பேச்சுவார்த்தையில், ஓய்வூதியர்களுக்கு 100 மாத காலம், பணியில் இருப்போருக்கு 4 மாத காலமும் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும், ஊதிய ஒப்பந்த பேச்சுக்கான தேதி அறிவித்தல் ஆகிய கோரிக்கைகளுக்கு தீர்வு காணாவிட்டால் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என தொழிற்சங்கங்கள் தீர்க்கமாக முடிவு செய்துள்ளன.
இதுதொடர்பாக தொழிற்சங்கங்கள் சார்ந்த கட்சித் தலைவர்கள் மூலம் அரசிடம் வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்படும் எனக் கூறப்படுகிறது.
இப்பேச்சுவார்த்தை முடிவின் அடிப்படையிலேயே, பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட வேண்டிய சூழல் நிலவுகிறது. அதேநேரம், வேலைநிறுத்தத்தில் ஈடுபட விரும்பாத தொழிலாளர்களின் விவரங்களை சேகரிக்கும் பணிகளும் நடைபெறுகின்றன. வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.