சென்னை: தமிழகத்தில் கீழமை நீதிமன்றங்களில் உள்ள உரிமையியல் (சிவில்) நீதிபதி பதவிகளில் உள்ள 245 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை டிஎன்பிஎஸ்சி கடந்த ஜூன் 1-ம் தேதி வெளியிட்டது. இந்த தேர்வெழுத மொத்தம்12,037 பட்டதாரிகள் விண்ணப்பித்தனர். இதையடுத்து முதல்நிலைத் தேர்வு ஆகஸ்ட் 19-ம் தேதி நடைபெற்றது.
இவற்றில் 2,544 பேர் அடுத்தகட்ட முதன்மைத் தேர்வுக்கு தகுதி பெற்றனர்.அவர்களுக்கான முதன்மைத் தேர்வு நவ. 4, 5-ம் தேதிகளில்நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் இதரவிதிகளின்படி நேர்முகத் தேர்வுக்கு மொத்தம் 472 பேர் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.
அதன் விவரங்களை /www.tnpsc.gov.in/ எனும் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். நேர்முகத் தேர்வுக்கான தேதி விவரங்கள் பின்னர் வெளியிடப்படும். என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
இதேபோல், ஒருங்கிணைந்த ஆராய்ச்சி உதவியாளர் சார்நிலைப் பணிகளில் அடங்கிய 2 பணியிடங்களுக்கான கணினிவழித் தேர்வு செப்டம்பர் 9, 10-ம் தேதிகளில் நடத்தப்பட்டது. இந்த தேர்வெழுதிய பட்டதாரிகளில் இருந்து நேர்முகதேர்வுக்கு 6 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
அதன் விவரப் பட்டியல் http://www.tnpsc.gov.in/ எனும் தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த 6 பேருக்கான நேர்முகத் தேர்வு ஜனவரி 22-ம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.