சென்னை: என்னை சந்திக்கும்போது பூங்கொத்துக்குப் பதில் கருத்தாழமிக்க புத்தகங்களை வழங்கவேண்டும் என்று அதிமுகவினருக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலிலும், அதனையடுத்து வரவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலிலும், அதிமுக மகத்தான வெற்றிபெற்று வரலாற்றுச் சாதனை படைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு கட்சியின் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள், என்னை நேரில் சந்திக்க வரும்போதும், கட்சி நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்கும்போதும், என்மீது கொண்ட பேரன்பின் காரணமாக பூங்கொத்து வழங்குவதை, இனிவரும் வரும் காலங்களில் கண்டிப்பாகத் தவிர்த்துஅதற்குப் பதில், தங்களால் முடிந்தால் கருத்தாழமிக்க புத்தகங்களை மட்டும் வழங்கினால், நான் பெருமகிழ்ச்சி அடைவேன். இதை நிர்வாகிகளும், தொண்டர்களும் அவசியம் கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.