கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை முன்னிட்டு பிரதமர் மோடியை தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து அழைப்பிதழ் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசு மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2024ம் ஆண்டுக்கான கேலோ இந்தியா விளையாட்டு போட்டி நடைபெற உள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 மாவட்டங்களில் இந்த விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. 18 வயதுக்குட்பட்டவர்கள் பிரிவில் நடத்தப்படும் இந்த கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் ஜனவரி 19ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த சுமார் 5,500க்கு மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். மேலும் 1600க்கும் மேற்பட்ட பணியாளர்கள்கள், 1000க்கும் மேற்பட்ட நடுவர்கள், 1200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்க உள்ளனர்.
மொத்தம் 27 வகையான பிரிவில் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் டெமோ போட்டியாக தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பமும் இடம் பெறுகிறது. கடந்த டிசம்பர் 22ம் தேதி நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிக்கான திருவள்ளுவர் இலச்சினையை வெளியிட்டார். இது தமிழ்நாட்டின் ஒற்றுமை, விளையாட்டு திறன் மற்றும் தமிழ் உணர்வினை பசைசாற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கான அழைப்பிதழை பிரதமர் மோடியிடம் வழங்கி நிறைவு விழாவில் பங்கேற்க தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுக்க உள்ளதாகவும் இதற்காக இன்று மாலை அல்லது நாளை காலை அவர் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.