சென்னை: பொறியாளர் பணி தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என தமிழ்நாடுஅரசு பணியாளர் தேர்வாணையத்தை (டிஎன்பிஎஸ்சி) தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: டிஎன்பிஎஸ்சியின் ஒருங்கிணைந்த பொறியாளர் பணிக்கான எழுத்து தேர்வு, ஜன.6, 7-ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இதற்கிடையே தொடர்கனமழை பாதிப்பால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்கள் இன்னும் இயல்பு நிலைக்கு முற்றிலுமாக திரும்பவில்லை.
இந்த மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தமிழக அரசு பணி தேர்வுகளுக்கு விண்ணப்பித்துள்ளனர். இவர்கள் கடந்த 3 வாரமாக சிரமப்பட்டு வரும்நிலையில், தேர்வுகளை நடத்துவது முறையானதாக இருக்காது.
தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் ஜன.7-ல் நடத்த இருந்த பட்டதாரிஆசிரியர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பணிக்கான தேர்வு, தென் மாவட்டத்தில் உள்ள வெள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல டிஎன்பிஎஸ்சியின் ஒருங்கிணைந்த பொறியாளர் பணிக்கான எழுத்து தேர்வையும் மறு தேதிக்கு தள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.