சென்னை: எண்ணூரில் எண்ணெய், வாயு கசிவை ஏற்படுத்திய தொழிற்சாலைகள் மீது கிரிமினல் வழக்குபதிவு செய்து, தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என்று பஞ்சாப், ஹரியாணா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கி.கண்ணன் வலியுறுத்தியுள்ளார். எண்ணூர் மக்கள் பாதுகாப்பு குழு சார்பில், எண்ணூரில் ஏற்பட்டு வரும் எண்ணெய் கசிவு மற்றும் வாயுக் கசிவு தொடர்பான கருத்து கேட்பு கூட்டம், முன்னாள் நீதிபதி கி.கண்ணன் தலைமையில் எண்ணூரில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பேசியதாவது: எண்ணூரில் இயங்கி வரும் தொழிற்சாலைகளால் இப்பகுதியில் காற்று மற்றும் நீர் மாசு அதிகமாக உள்ளது. இதன் காரணமாக குழந்தைகளுக்கு இளநரை, புற்றுநோய், கை விரல்கள் நீளமாக வளர்தல், ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசப் பிரச்சினை, தோல் நோய்,அடிக்கடி சளி பிடித்தல், மகளிருக்கு கருவுற முடியாமை, கர்ப்பப்பை புற்றுநோய், மார்பக புற்றுநோய் மாதவிடாய் பிரச்சினைஉள்ளிட்டவை ஏற்பட்டு வருகின்றன. சிறு வயதில் குழந்தைகள் இறக்கிறார்கள். இளைஞர்கள் இதய செயலிழப்பு மற்றும் மாரடைப்பால் இறக்கிறார்கள்.
எண்ணெய் கசிவால் முகத்துவாரப் பகுதியில் பிடிக்கும் மீன்கள்மற்றும் இறால்களை யாரும் வாங்குவதில்லை. இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 26-ம் தேதி நள்ளிரவு ஏற்பட்ட வாயுக் கசிவால் மரண பயம் ஏற்பட்டது. இனி இந்த தொழிற்சாலைஇயங்கக் கூடாது. நிரந்தரமாக மூடவேண்டும். இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டினர்.
பின்னர் முன்னாள் நீதிபதி கி.கண்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீதி கேட்டு வருவோருக்கு நீதிமன்றம் உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கைஎனக்கு இருக்கிறது.ஆனால் நீதிமன்றத்தில் சக்தி இல்லை. மக்களிடம்தான் உள்ளது.
ஸ்டெர்லைட் விவகாரத்தில் நீதிமன்றங்கள் ஆலையை திறக்கத்தான் உத்தரவிட்டன. ஆனால்மக்கள் போராட்டம்தான் வெற்றிபெற்றது. முதலில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். அரசை எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும். அதன்மூலமே வெற்றி கிடைக்கும்.
வாயுக் கசிவு விவகாரத்தில் மக்களின் வலியை அரசு புரிந்துகொள்ளவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இதுவரை உண்மையை மக்களுக்கு சொல்லவில்லை. இதனால் மக்களின் கோபம்தான் அதிகரிக்கும்.
போபால் விஷ வாயு விவகாரத்தில் தொழிற்சாலையின் பொறுப்பாளர் ஆன்டர்சன் மீது நடவடிக்கைஎடுக்காமல், வெளிநாட்டுக்கு தப்பிக்க வைத்தனர். நள்ளிரவில் குழந்தைகளுடன் மக்களை ஓடவிட்ட தொழிற்சாலை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்காமல், வாயுகசிவுக்கான காரணம் கேட்க சென்றவர்கள் மீது வழக்கு பதிவது, அரசின் கடுமையான அலட்சியத்தை காட்டுகிறது.
முதலில் மாவட்ட ஆட்சியர், பாதிக்கப்பட்ட மக்களுக்கான மருத்துவ சிகிச்சை செலவையும், நிவாரண தொகையையும் தொழிற்சாலையிடம் வசூலித்திருக்க வேண்டும். இதைக்கூட செய்யவில்லை என்றால் என்ன நிர்வாகம் நடக்கிறது.
எண்ணெய், வாயு கசிவு விவகாரத்தில் தொழிற்சாலைமீது கிரிமினல்வழக்குபதிவு செய்து, தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும்.மக்கள் மீதான பொய் வழக்குகளைஅரசு திரும்பப்பெற வேண்டும். இப்பகுதியில் உள்ள 31 கிராமங்களில்வசிக்கும் மக்களிடம் உடல்நலம்சார்ந்த கணக்கெடுப்பு, முழு உடல்பரிசோதனை நடத்த வேண்டும்.
மக்களிடம் கேட்கப்பட்ட கருத்துகள் அடிப்படையில் அறிக்கை ஒன்றை தயாரித்து அரசுக்கு அளிக்கஇருக்கிறோம். இவ்வாறு அவர்கூறினார். இக்கூட்டத்தில் வழக்கறிஞர் நாகசைலா, பேராசிரியர் கல்பனா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.