சென்னை: தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இணை முதன்மை பொறியாளரின் ரூ.4.71 கோடி மதிப்பிலான சொத்துகள், நகைகளை அமலாக்கத் துறை முடக்கியது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் வேலூர் மண்டலத்தில் இணை முதன்மை சுற்றுச்சூழல் பொறியாளராக பன்னீர்செல்வம் பணியாற்றி வந்தார். இந்நிலையில், சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு அதிகளவு லஞ்சம் கேட்பதாக அவர் மீது புகார் எழுந்தது.
இதையடுத்து, கடந்த 2020-ம் ஆண்டு வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறைபோலீஸார், வாணியம்பாடியில் உள்ள அவரது வாடகை வீடு,ராணிப்பேட்டையில் உள்ள சொந்த வீடு உள்ளிட்ட அவருக்குசொந்தமான பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில், அவரது வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம், தங்க நாணயங்கள், நகைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கியஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, பன்னீர்செல்வம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் சட்டவிரோதபணிப்பறிமாற்றம் தடுப்புச் சட்டத்தின்கீழ், இந்த வழக்கை அமலாக்கத் துறை கையில் எடுத்து விசாரணை நடத்தி வந்தது. விசாரணையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் பன்னீர்செல்வம் ஈடுபட்டதை அமலாக்கத்துறை உறுதி செய்தது.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட, பன்னீர்செல்வத்தின் ரூ.1.12 கோடி மதிப்புள்ள 6 அசையா சொத்துகள், கணக்கில் வராத பணம் ரூ.3.59கோடி, 61 தங்க நாணயங்கள்,3,625.80 கிராம் தங்க நகைகள், 6,492 கிராம் வெள்ளிப் பொருட்களை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.