Breaking News
Home / செய்திகள் / `பாஜக கூட்டணியில் இல்லை’… அதிமுக கூட்டணியில் யார் யார் நிற்கிறார்கள்?!

`பாஜக கூட்டணியில் இல்லை’… அதிமுக கூட்டணியில் யார் யார் நிற்கிறார்கள்?!

முன்னதாக பா.ஜ.க – அ.தி.மு.க கூட்டணி தொடர்பாகத் தொடர் விமர்சனங்கள் எழுந்த நிலையிலும், அந்தக் கூட்டணியிலிருந்து விலகுவதாக அ.தி.மு.க அறிவிக்கவில்லை.

சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணியால் அதன் முக்கியத் தலைவர்கள் பலரும் தோல்வியடைந்ததாகச் சொல்லப்பட்டபோதும் பா.ஜ.க-வுடனான கூட்டணியை முறித்துக்கொள்ளவில்லை. அ.தி.மு.க-வின் தலைவர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் விமர்சித்தபோதும் தலைவர்கள் மூலம் கண்டனத்தைத் தெரிவித்துவிட்டு ஒதுங்கிக்கொண்டது அ.தி.மு.க. ஆனால், அண்ணா, பெரியார் என பா.ஜ.க-வின் விமர்சனங்கள் அடுத்தடுத்த கட்டத்துக்கு நகரும்போது பா.ஜ.க கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்தது அ.தி.மு.க தலைமை.

அதற்குக் காரணமாக, பா.ஜ.க மாநிலத் தலைமை தொடர்ந்து அ.தி.மு.க தலைவர்களை விமர்சித்ததைச் சொன்னது. அதன் பிறகு எப்போதெல்லாம் சந்தர்ப்பம் வாய்க்கிறதோ அப்போதெல்லாம், “பா.ஜ.க-வுடனான கூட்டணி இல்லை” என அ.தி.மு.க தலைவர்கள் பேசிவந்தனர். ஆனாலும், “இரண்டாம் கட்டத் தலைவர்கள்தான் பேசுகிறார்கள். எடப்பாடி பா.ஜ.க கூட்டணி குறித்து எங்குமே பேசவில்லை. பா.ஜ.க – அ.தி.மு.க விலகலே ஒரு நாடகம்தான்” எனப் பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்தன. இந்தச் சூழலில் டிசம்பர் 26-ம் தேதி சென்னையில் நடந்த அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டத்தில் பா.ஜ.க-வுடன் இனி கூட்டணி இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறார் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.  அதிமுக- பாஜக தலைவர்கள் சந்திப்பு

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ஜ.க-வுக்கு, அ.தி.மு.க-வும் அ.தி.மு.க-வுக்கு பா.ஜ.க-வும் இணைந்தே பயணிக்கவேண்டிய சூழல் இருந்தது. ஆனால், இப்போதைக்கு அதற்கு வாய்ப்பே இல்லை என்ற சூழல் உருவாகியிருக்கிறது. அப்படியானால், அ.தி.மு.க கூட்டணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள், யாரெல்லாம் இணைவார்கள் என்ற விசாரணையில் இறங்கினோம். `பாஜக-வுடன் கூட்டணி இல்லையென்பதை மீண்டும் தெளிவுபடுத்துகிறேன்’ – அதிமுக பொதுக்குழுவில் இபிஎஸ் பேச்சு

நம்மிடம் பேசிய அமைப்புச் செயலாளர்கள் சிலர், “2019 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி, த.மா.கா உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தன. இந்தக் கூட்டணியிலிருந்து கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது தே.மு.தி.க வெளியேறியது. பா.ஜ.க-வுடனும் கூட்டணி இல்லை என அடித்துச் சொல்கிறார்கள். ஆனால், யாருடன் கூட்டணி என்ற தெளிவில்லாமல்தான் அ.தி.மு.க இந்தத் தேர்தலை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. இப்போதைக்கு புரட்சி பாரதம் கட்சி, எஸ்.டி.பி.ஐ ஆகியவை மட்டுமே அ.தி.மு.க கூட்டணியில் இருப்பதாக அறிவித்திருக்கின்றன. த.மா.கா தலைவர் ஜி.கே.வாசனோ அ.தி.மு.க – பா.ஜ.க விரைவில் இணைந்துவிடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். புதிய தமிழகம் கட்சி எப்படியும் அ.தி.மு.க கூட்டணியோடுதான் பயணிக்கும். மற்றபடி தி.மு.க கூட்டணியிலிருந்து சில கட்சிகளும், சில அமைப்புகளும் அ.தி.மு.க கூட்டணியில் வந்து இணையும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.” என்றவர்கள்,

“எது எப்படியோ, கூட்டணி குறித்து ஜனவரிக்குள் அறிவிப்பு வெளியாகும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம். அப்படி அறிவிப்பு வந்தால்தான் யாரோடு இணைந்து செயல்படப் போகிறோம் என்ற தெளிவோடு தேர்தல் வேலைகளைச் செய்ய முடியும். கடைசி நேர அறிவிப்பால் எந்தப் பயனும் இல்லை. இதைப் புரிந்துகொண்டு தலைமை விரைவில் அறிவிப்பு வெளியிட வேண்டும்” என்றனர்.  எடப்பாடி – பூவை ஜெகன் மூர்த்தி

“இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கவில்லை. தெளிவில்லாமல் எதையும் பேசத் தலைமை விரும்பவில்லை. ஆனால், விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும்” என்பதோடு முடித்துக் கொள்கிறார்கள் எம்.ஜி.ஆர் மாளிகை சீனியர்கள். தி.மு.க., தனது வழக்கமான அணியிலும், பா.ஜ.க-வும் ஒரு தெளிவோடும், சில கணக்குகளோடும் இருக்கின்றன. ஆனால், அ.தி.மு.க-தான் தங்கள் கூட்டணியில் யார் வருவார்கள், யார் விலகுவார்கள் என்ற தெளிவில்லாமல் தவித்துக்கொண்டிருக்கிறது. அந்தத் தவிப்பை போக்கவேண்டிய பொறுப்பு தலைமையிடம் இருக்கிறது. என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

Loading

About Admin

Check Also

“தேர்தல் பத்திர பிரச்சினையை திசைதிருப்பவே சிஏஏ அமல்” – செல்வப்பெருந்தகை

சென்னை: தேர்தல் நன்கொடை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பை திசைத் திருப்பவே குடியுரிமை திருத்த சட்ட அமலாக்க அறிவிப்பை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *