சென்னை: விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதி பயணத்துக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தீவுத்திடலில் அஞ்சலி: பொதுமக்கள், தொண்டர்கள், அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர், கலைத் துறையினர் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக, விஜயகாந்த் உடல், சென்னை தீவுத்திடலில் இன்று காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை வைக்கப்படுகிறது. பின்னர், அங்கிருந்து இறுதி ஊர்வலம் மதியம் 1 மணி அளவில் புறப்பட்டு, பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேடு தலைமை அலுவலகம் சென்றடையும் என்று தேமுதிக அலுவலகம் நேற்று தெரிவித்துள்ளது. கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலக வளாகத்தில் விஜயகாந்த் உடல் இன்று மாலை 4.45 மணி அளவில் அடக்கம் செய்யப்படுகிறது.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதி பயணத்துக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.
பாஜக தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், மார்கசிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.