சென்னை: கோடை கால விடுமுறையில் மக்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக முக்கிய விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கி விட்டது. நெல்லை, பாண்டியன் உட்பட முக்கிய விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு நடைபெற்று வருகிறது.
நடப்பு கல்வியாண்டில் இறுதி தேர்வுகள் 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் தொடங்கி, ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரத்தில் முடியும். இதுபோல், கல்லுாரி மாணவர்களின் தேர்வு முடிந்து பிறகு, கோடை விடுமுறை அறிவிக்கப்பட உள்ளது. இந்த கோடை விடுமுறை காலத்தில் சென்னை, கோயம்புத்தூர் போன்ற பெரிய நகரங்களில் வசிப்போர், சொந்த ஊர்களுக்கும், சுற்றுலா தலங்களுக்கும் செல்வார்கள்.
அந்தவகையில், வரும் ஆண்டில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை காலத்தில் பயணம் மேற்கொள்வோர், விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். ரயில்வேயில் 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி இருக்கிறது. எனவே, மக்கள் டிக்கெட் முன்பதிவு செய்து வருகிறார்கள்.
இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: பெரும்பாலான பயணிகள் பொங்கலுக்கு செல்லவே தற்போது திட்டமிட்டு வருகின்றனர். இருப்பினும், 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி இருப்பதால், கோடை விடுமுறையில் பயணம் மேற்கொள்ள, சிலர் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர்.