சென்னை: எண்ணூர் எண்ணெய் கசிவு விவகாரம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தார். சென்னை எண்ணூர் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பசுமைத் தாயகம் அமைப்பு எண்ணூர் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் நேற்று மருத்துவ முகாம் நடைபெற்றது. பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி உள்ளிட்ட மருத்துவர்கள் பங்கேற்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு பரிசோதனையை மேற்கொண்டு சிகிச்சை அளித்தனர். மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு உடல் பரிசோதனை, இருதய பரிசோதனை உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டன. எண்ணூர் சுற்றுவட்டார பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்கள் மருத்துவ முகாமில் பங்கேற்று சிகிச்சை பெற்றனர்.
அப்போது, அன்புமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: எண்ணூர் பகுதியில் எண்ணெய் மற்றும் ரசாயன கசிவுகளுக்கான காரணம் குறித்து அரசு இதுவரை எந்த ஆய்வும் நடத்தவில்லை. எண்ணெய் கசிவுகளை அகற்ற உரிய தொழில்நுட்பம் மேற்கொள்ளப்படவில்லை. எண்ணெய் கசிவால் மனிதர்களுக்கு மட்டுமின்றி கால்நடைகளுக்கும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இந்த எண்ணெய் கசிவு விவகாரத்துக்கு யார் காரணம் என அறிய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் தமிழக அரசு குழு அல்லது ஆணையம் அமைக்க வேண்டும்.
தேவைப்பட்டால் சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும். மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். பாதிக்
கப்பட்ட பகுதிகளுக்கு முதல்வர் நேரில் வந்து ஆய்வு செய்ய வேண்டும். காலநிலை மாற்றம் காரணமாக இனி ஒவ்வொரு மழையிலும் பெருவெள்ளம் வரலாம். அடுத்த 5 முதல் 6 ஆண்டுகளில் சென்னையை தாக்கும் வகையில் மீண்டும் ஒரு பெருவெள்ளம் வருவதற்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.