சென்னை: மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், பாஜகவில் உறுப்பினர் சேர்க்கையை விரைவுபடுத்துமாறு செயல்வீரர்கள் கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் நெருங்கி வருகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள சட்டப்பேரவை, மக்களவை தொகுதிகளில், அந்தந்த மாவட்ட தலைவர்கள் தலைமையில் கூட்டம் நடத்தி தேர்தல் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று அண்ணாமலை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி, சென்னை ஆயிரம்விளக்கு சட்டப்பேரவை தொகுதியின் பாஜக செயல்வீரர்கள் கூட்டம் தியாகராய நகர் தெற்கு உஸ்மான் சாலையில் கடந்த 24-ம் தேதி நடந்தது.
மத்திய சென்னை கிழக்கு மாவட்டதலைவர் விஜய் ஆனந்த் தலைமை தாங்கினார். மக்களவை தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது, மக்களிடம் பாஜக அரசின் திட்டங்ளை கொண்டு செல்வது, பாஜகவின் செயல் திட்டங்கள் ஆகியவை குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை வழங்கப்பட்டது. வாக்குச்சாவடி கமிட்டியை வலுப்படுத்த வேண்டும், உறுப்பினர் சேர்க்கையை விரைவுபடுத்த வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மக்களவை தேர்தலுக்கு குறைவான நாட்களே இருப்பதால், நிர்வாகிகள் அவரவர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி கமிட்டியை வலுப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மற்ற பகுதிகளில் தலையிட வேண்டாம் என்று மாநில செயலாளர் வினோஜ்பி.செல்வம் அறிவுத்தினார். மத்திய சென்னை தொகுதி
இணைஅமைப்பாளர் ஆதித்யா, பொறுப்பாளர் ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளர் வீரத்திருநாவுக்கரசு, இணை அமைப்பாளர் தனசேகர் உட்பட 500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.