சென்னை: முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் நிதியை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, முகாம் அலுவலகத்தில் நேற்று குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் சந்தித்தார். அப்போது, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு, குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் அறக்கட்டளை சார்பில் ரூ.5 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.
இந்த சந்திப்பின்போது, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மழை வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் எதிர்பாராத பெரும் தாக்குதலை நிகழ்த்தியபோது, அந்த சவால்களை எதிர்கொண்டு போர்க்கால அடிப்படையில் மக்களை காக்கும் பணியில் பணியாற்றும் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து பாராட்டினார். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.