சென்னை: உலகம் முழுவதும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 52 சதவிகிதம் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்திருப்பதாக உலக சுகாதார மையம் கவலை தெரிவித்திருக்கிறது.
இந்த உலகில் மனிதர்கள் உருவானதிலிருந்தே, தொடர்ந்து உயிர்வாழ ஏராளமான நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். இருப்பினும், நோய் தொற்றுகள் ஏற்படுத்திய நெருக்கடி கடுமையான பாதிப்புகளை உண்டாக்கியிருக்கிறது. அம்மை நோய் தொடங்கி பிளேக் நோய் வரை வைரஸ் கிருமிகள் மனிதர்களை கொன்றிருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக உருவானதுதான் கொரோனா வைரஸ் தொற்று. கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் முதன் முதலில் இந்த தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.
தீவிரம்: அப்போதிலிருந்து இப்போது வரை இந்த வைரஸ் 70 லட்சம் மக்களை கொன்று குவித்திருக்கிறது. 70 கோடிக்கும் அதிகமானோரை பாதித்திருக்கிறது. இருப்பினும் இதற்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு மருந்து பெரும் பலனை கொடுத்தது. கொரோனா வைரஸ் பல்வேறு திரிபுகளை அடைந்தாலும், இந்த தடுப்பு மருந்து ஓரளவுக்கு பலன் கொடுத்தது. ஆனால் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது.
ஜேஎன் 1: ஓமிக்ரான் BA.2.86 வைரஸிலிருந்து திரிபு ஏற்பட்டு ‘ஜேஎன் 1’ எனும் புதிய வகை கொரோனா வைரஸ்தான் இந்த திடீர் பரவலுக்கு காரணம். கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் கண்டறியப்பட்ட இது, சீனாவிலும், சிங்கப்பூரிலும் அடுத்தடுத்து பரவியது. சிங்கப்பூரில் இது மிக வேகமாக பரவி வருகிறது. இந்தியாவை பொருத்த அளவில் கேரளாவில் முதியவர் ஒருவருக்கு இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
52 சதவிகிதம்: இந்நிலையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 சதவிகிதம் அதிகரித்துள்ளது என உலக சுகாதார மையம் கவலை தெரிவித்திருக்கிறது. அதாவது கடந்த 28 நாட்களில் மட்டும் 8.5 லட்சம் பேர் புதியதாக கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் ஜேஎன் 1 கொரோனா வைரஸ்தான். ஆனால் நல்வாய்ப்பாக உயிரிழப்பு 8 சதவிகிதம் குறைந்திருக்கிறது.
உயிரிழப்பு: ஆனால் ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா என உலகின் 70-75 சதவிகித மக்கள் தொகையை கொண்டிருக்கும் வட அரைகோள பகுதியில் இது குளிர் காலம் என்பதால் தொற்று பாதிப்பு சுவாச கோளாறை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. எனவே இதிலிருந்து தப்பிக்க வேண்டுமெனில், முககவசம் அணிதல், அடிக்கடி கைகளை கழுவுதல், அதிக அளவில் கோவிட் பரிசோதனைகளை மேற்கொள்ளுதல் மேற்கொள்ளப்பட வேண்டும் என உலக சுகாதார மையம் எச்சரித்திருக்கிறது.
தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் மீண்டும் லாக்டவுன் வருமா? என்கிற அச்சம் மேலெழுந்திருக்கிறது. ஆனால் மருத்துவர்கள் இதனை மறுத்துள்ளனர். லாக்டவுன் மூலம் தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த முடியாது, எனவே லாக்டவுன் போடப்படாது என்று கூறியுள்ளனர்.