சென்னை: அரசியல் செய்யும் நோக்கத்துடன் நிர்மலா சீதாராமன் பேசுவதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டியுள்ளார்.
தென் மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்பை எதிர்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார். இந்த நிலையில் ஒன்றிய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், தமிழ்நாடு முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்க முடியாது. தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது. கூடுதல் சிறப்பு நிதி வழங்க முடியாது என்று தமிழ்நாட்டின் மீது மிகுந்த வன்மத்தை வெளிப்படுத்துவது போன்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். இது தொடர்பாக பல்வேறு தரப்பினர் நிர்மலா சீதாராமனுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அரசியல் செய்யும் நோக்கத்துடன் நிர்மலா சீதாராமன் பேசுவதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது; நிவாரணம் கேட்டால் ஒன்றிய அரசு அரசியலாக பார்க்கிறது; அரசியல் செய்யும் நோக்கத்துடன் நிர்மலா சீதாராமன் பேசுகிறார். நிர்மலா சீதாராமன் பேசிய வார்த்தைகளில் மேன்மை இல்லை, அனுதாபம் கூட இல்லை; அதை மக்கள் வேதனையாக பார்க்கின்றனர். மழையினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு தமிழக முதல்வர் உடனடி நிவாரணம் அளித்துள்ளார். வெள்ள பாதித்த பகுதிகளில் அதிகாரிகள் சேதமடைந்த பயிர்கள் குறித்து முழுமையாக ஆய்வு செய்து வருகின்றனர். பயிர் காப்பீட்டு தொகை நிவாரணத் தொகை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தோட்டக்கலை துறை சார்பில் கடந்த 4 நாட்களாக டிராக்டர் மூலம் 70 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. என்று அவர் கூறியுள்ளார்