சென்னை: எண்ணூர் பகுதியில் இதுவரை 20 ஆயிரம் லிட்டர் எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை காரணமாக டிசம்பர் 3 மற்றும் 4-ஆம் தேதிகளில் பெய்த கனமழையின்போது பூண்டி மற்றும் புழல் ஏரிகளில் இருந்து சுமார் 48,000 கன அடி உபரிநீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக சிபிசிஎல் நிறுவனத்துக்குள் எதிர்பாராத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆலை வளாகத்துக்குள் தேங்கி இருந்த எண்ணெய்க் கசிவுகள் பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக வெளியேறின.
வெள்ள நீர் தேங்கிய குடியிருப்பு பகுதிகளில் மழைநீரோடு கச்சா எண்ணெய்யும் கலந்து, வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். வெளியேறிய கச்சா எண்ணெய்க் கழிவு, கொசஸ்தலை ஆற்றில் கலந்து கடலில் பரவியுள்ளது. இதனால் மீனவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் பாழாகி தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
எண்ணெய் கழிவு, வெள்ள நீரிலும், கடலிலும் கலந்தது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது. மேலும், எண்ணெய் கழிவுகளை விரைவாக அகற்ற தமிழக அரசுக்கும், சிபிசிஎல் நிறுவனத்துக்கும் பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணியை தமிழக அரசு தீவிரப்படுத்தியது.
அதன்படி, சென்னை எண்ணூர் துறைமுகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன. எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணியில் தமிழக அரசுடன் தற்போது மும்பையைச் சேர்ந்த சீ கேர் மரைன் சர்வீசஸ் என்ற நிறுவனமும் கைகோர்த்து, எண்ணெய் கழிவை அகற்றி வருகிறது. எண்ணூர் முகத்துவாரத்தில் இதுவரை 20 ஆயிரம் லிட்டர் எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெ.ராதாகிருஷ்ணன் பேசுகையில், “எண்ணூர் முகத்துவார பகுதியில் கடலில் கலந்த எண்ணெய் படலத்தை அகற்றுவது குறித்து மாநில அளவில் ஒரு குழு அமைக்கப்பட்டு தொடர்ந்து என்னென்ன நடவடிக்கைகள் எடுப்பது என்பது தொடர்பாக திட்டமிடப்பட்டு வருகிறது. அதேபோல மாநகராட்சி ஆணையர் தலைமையில் பல்வேறு துறைகள் சார்ந்த மாவட்ட குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
இதுவரை எண்ணூரில் 200 டன் திடக் கழிவுகள், 20 ஆயிரம் லிட்டர் அளவு எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. மேலும் சுகாதார சீர்கேட்டை தடுக்கும் வகையில் இந்த பகுதிகளில் மொத்தம் 400 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் குறிப்பாக சுவாச நோய், தோல் நோய், கண் நோய்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
அதேபோல பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மணலை முழுவதும் மாற்றவும் நீர்வள ஆதாரத்துறையுடன் இணைந்து திட்டமிடப்பட்டு, சுற்றுச்சூழல் அங்கீகாரத்துடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எண்ணெய் படலத்தை அகற்றும் பணிக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது. எண்ணெய் முழுவதும் அகற்றிவிட்டால் கூட, அந்த பகுதிகளில் உயிரினங்களையும் மீண்டும் கொண்டு வருவதற்கு அதிக காலம் எடுக்கும். இதற்காக அனைத்து தரப்பு வல்லுநர்களிடம் இருந்து கருத்துகளை பெற வேண்டியது அவசியம்” எனத் தெரிவித்துள்ளார்.