சென்னை: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு வழங்கப்படும் ரூ.6,000 புயல் நிவாரண தொகையை இன்றே பெற்று கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘மிக்ஜாம்’ புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பல இடங்களில் கடந்த 3, 4ம் தேதிகளில் அதிகனமழை பெய்தது. இந்த மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் தலா ரூ.6,000 நிவாரண நிதி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
இதையடுத்து, சென்னை மாவட்டம் முழுவதும், மற்ற 3 மாவட்டங்களில் மழை பாதித்த தாலுகாக்களில் மட்டும் ரூ.6,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. தற்போது வெள்ள நிவாரண நிதி ரூ.6,000 வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் தொடங்கியுள்ளது. ‘மிக்ஜாம்’ புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 நிவாரணம் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த டிசம்பர் 17ம் தேதி வேளச்சேரியில் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு வழங்கப்படும் ரூ.6,000 புயல் நிவாரண தொகையை இன்றே பெற்று கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 23ம் தேதி வரை நிவாரண தொகை பெற டோக்கன் வழங்கப்பட்ட நிலையில் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டோக்கனில் எந்த தேதி குறிப்பிடப்பட்டிருந்தாலும் இன்றே பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் பொங்கல் பரிசு தொகுப்புக்கான நடவடிக்கையில் ரேஷன் கடை பணியாளர்கள் ஈடுபட வேண்டும் என்பதால் முன்கூட்டியே வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.