சென்னை: வெறும் 1000 ரூபாய்க்காக கத்தரிக்கோலால் குத்தப்பட்டு உயிரிழந்துள்ளார் 21 வயது இளைஞர்.. என்ன நடந்தது சென்னை பெரும்பாக்கத்தில்?
சென்னை பெரும்பாக்கம் எழில் நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்.. 22 வயதாகிறது.. சென்டரிங் வேலை செய்து வருகிறார்.. இவரது நண்பர் ராஜேஷ்.. 21 வயதாகிறது.. இவர்கள் இருவருமே இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்து வந்தவர்கள்..
கார்த்திக்: சில தினங்களுக்கு முன்பு, கார்த்திக்கிடம் 1000 ரூபாய் கடனாக பெற்றுள்ளார் ராஜேஷ்.. ஆனால், குறிப்பிட்ட தேதியில் திருப்பி தருவதாக சொல்லியும் பணம் தரவில்லை.. அதனால், கொடுத்த கடனை கார்த்திக் கேட்டு வந்தும்கூட, ராஜேஷ் கடனைத் திருப்பி தராமல் அலைக்கழித்து வந்ததாக தருகிறது..
இந்தநிலையில் நேற்றிரவு, ராஜேஷ் தன்னுடைய வீட்டுக்கு பக்கத்தில் தினேஷ் என்பவருடன் பேசிக்கொண்டிருந்தார்.. அப்போது அங்கு சென்ற கார்த்திக், ராஜேஷிடம் 1000 கடன் பணத்தை திருப்பி தருமாறும், அந்த பணத்தில் மது வாங்க வேண்டும் என்றும் கேட்டிருக்கிறார்.. ஆனால், பணம் இல்லை என்று சொன்னதுடன், பணத்தை எப்போது திருப்பி தருவேன் என்றுகூட ராஜேஷ் சொல்லவில்லையாம்.
ஆத்திரம்: இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக், ராஜேஷை அங்கேயே அடித்து தாக்கி உள்ளார்.. இதைப்பார்த்த, தினேஷ் நண்பர்கள் 2 பேரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.. சிறிது நேரம் கழித்து ராஜேஷ் , தினேஷ் வீட்டில் இருப்பதை தெரிந்துக்கொண்டு, கார்த்திக் வீட்டிற்கு சென்று கதவை தட்டியிருக்கிறார்.. கதவை திறந்து வெளியே வந்த தினேஷ், ஏன் இப்படி கதவை தட்டிக்கொண்டே இருக்கிறாய் என்று கேட்டு சத்தம் போட்டுள்ளார்.
ராஜேஷூக்கு தந்த கடனை திரும்பக் கேட்டு வந்திருக்கிறேன் என்றார் கார்த்திக்.. இதைக்கேட்டு ஆத்திரமடைந்த ராஜேஷ், வீட்டிற்குள்ளிருந்து கத்திரிக்கோலை எடுத்து வந்து, கார்த்திக்கை குத்திவிட்டார்.. மார்பு, கழுத்து, தோள் பகுதிகளில் சரமாரியாக குத்தியதில், ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்..
கத்தரிக்கோல்: இதைப்பார்த்து பயந்துபோன, தினேஷூம், ராஜேஷூம், நண்பர்கள் உதவியுடன் கார்த்திக்கை மீட்டு ஆட்டோவில் ஏற்றி அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், கார்த்திக் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொன்னார்கள்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ராஜேஷ், மறுபடியும் ஒரு ஆட்டோவில் கார்த்திக் சடலத்தை ஏற்றிக்கொண்டு, நேராக பெரும்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தார்.. அங்கிருந்த போலீசாரிடம், “என் நண்பனை நான்தான் ஆத்திரத்தில் கத்திரிக்கோலால் குத்திக்கொன்றுவிட்டேன்.. அவரது உடல் வெளியே ஆட்டோவில் இருக்கிறது” என்றார்.
போஸ்ட் மார்ட்டம்: இதனைக் கேட்டு மிரண்ட போலீஸார், ஆட்டோவில் இருந்து கார்த்திக் சடலத்தை கைப்பற்றி, போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கும் பதிவு செய்து, ராஜேஷை கைது செய்தனர். வெறும் 1000 ரூபாய் கடனுக்காக 22 வயது நண்பனை கத்தரிக்கோலால் கொன்று, 21 வயதிலேயே ஜெயிலுக்கும் போய்விட்டார் இளைஞர் ராஜேஷ்.