சென்னை : ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கியோருக்கு உணவு விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, “நெல்லை மாநகர பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு இருக்கிறேன். மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை உட்பட 4 மாவட்டங்களை ஆய்வு செய்ய மத்தியக் குழு இன்று அல்லது நாளை வர வாய்ப்பு உள்ளது.தமிழக அரசு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முழு வீச்சில் மேற்கொன்டு வருகிறது. பாதிப்பு குறித்து ஆய்வு செய்து கணக்கிடும் பணி நடந்து வருகிறது.
படகுகள் செல்லக்கூடிய இடங்களில் மீட்புப் படையினர் தீவிரப்பணி மேற்கொண்டுள்ளனர். விமானப்படை உள்ளிட்ட அமைப்புகளின் உதவி கோரப்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கியோருக்கு உணவு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திற்கு பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர். தண்ணீர் வேகமாக செல்லும் போது, ரயில் பயணிகளை அழைத்து வருவது ஆபத்தானது,”என்றார். இதனிடையே சென்னையில் இருந்து 100 நடமாடும் மருத்துவ வாகனங்கள் தென் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மழை பாதித்த நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட உள்ளது.மருத்துவர், செவியலியர், மருந்தாளுநர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்டோர் ஒவ்வொரு வாகனத்திலும் இருப்பார்கள்.