சென்னை: ‘மிக்ஜாம்’ புயல் நிவாரணப் பணிகளுக்கு அரசு ஊழியர்களின் ஒருநாள் ஊதியத்தை வழங்க ஜாக்டோ ஜியோ முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் – அரசுப் பணியாளர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ, கடந்த 2017 முதல் செயல்பட்டு வருகிறது. இழந்த உரிமைகளைப் பெறுவதற்காக ஆளும் ஆட்சியாளர்களுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள், போராட்ட இயக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், பேரிடர் காலங்களுக்கு தமிழக அரசுக்கு உதவிக்கரம் நீட்ட என்றும் தவறியதில்லை.
அதன்படி, கடந்த காலங்களில் ஒக்கி, கஜா, நிவார் போன்ற புயல்களால் தமிழகம் பாதிக்கப்பட்டபோதும், கரோனா பேரிடரில் சிக்கித் தவித்தபோதும் நிவாரணப் பணிகளில் கூட்டமைப்பு ஈடுபட்டதுடன், ஒருநாள் ஊதியத்தையும் வழங்கியுள்ளோம்.
தற்போது ‘மிக்ஜாம்’ புயலால் சென்னை உட்பட 4 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் முழுவீச்சுடன் தமிழக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழக அரசின் நிவாரணப் பணிகளுக்கு ஜாக்டோ ஜியோ சார்பில், தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் – அரசுப் பணியாளர்கள் தங்களது ஒருநாள் ஊதியத்தை வழங்குவதென முடிவு செய்துள்ளோம். இதனை முதல்வருக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
போராட்டம் நடத்த முடிவு: இதற்கிடையே, ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி டிச.28-ம் தேதி சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே கோட்டை முற்றுகை போராட்டத்தை முன்னெடுக்க இருப்பதாக நேற்று நடைபெற்ற ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.