சென்னை: குடி என்னும் தீய பழக்கத்துக்கு மக்கள் ஆளாவதன் மூலம் வருமானம் ஈட்டலாம் என எதிர்பார்த்துக் கொண்டிருக்க கூடாது என டாஸ்மாக் நிர்வாகத்துக்கும், டாஸ்மாக் ஒப்பந்ததாரர்களுக்கும் உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
காலி மதுபாட்டில்களை வனப்பகுதிகள், நீர்நிலைகள், விவசாய நிலங்கள் உள்ளிட்ட திறந்தவெளி பகுதிகளில் வீசுவதை தடுக்கும் வகையில் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை அமல்படுத்த டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம், உத்தரவிட்டது. அதன்படி மதுபாட்டில்களுக்கு கூடுதலாக ரூ.10 வசூலித்து காலி பாட்டில்களை திரும்பக் கொடுக்கும்போது ரூ.10-ஐ திருப்பி வழங்க உத்தரவிட்டது. இந்த திட்டம் கொடைக்கானல், ஊட்டி, ஏலகிரி, ஏற்காடு போன்ற மலைப் பகுதிகளிலும், நீலகிரி, கோவை, பெரம்பலூர் மாவட்டங்களிலும் முன்னோடித் திட்டமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு திரும்பப் பெறப்படும் காலி பாட்டில்களை கொள்முதல் செய்வதற்கு டெண்டர் கோரப்பட்டு ஒப்பந்த காலம் வரும் 2024 ஏப்ரலில் முடிவடைய உள்ளது.
இந்நிலையில் கோவை மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை ஒட்டிய பார்களுக்கான டெண்டர்களில் காலி பாட்டில் சேகரிப்பு மற்றும் தின்பண்டங்கள் விற்பனை என குறிப்பிடப்பட்டு இருந்ததால், அந்த டெண்டரை எதிர்த்து ஏற்கெனவே காலி பாட்டில்களை சேகரிக்க உரிமம் பெற்றவர்கள் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.
இந்த வழக்குகள் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா, அருண் அன்புமணி ஆகியோரும், அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரனும் ஆஜராயினர்.
மனுதாரர்கள் தரப்பில் வாதிடும்போது, ‘தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள இந்த டெண்டர் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு முரணாக உள்ளது. காலி பாட்டில்களை சேகரித்து கொள்முதல் செய்ய எங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ள நிலையில் புதிதாக பார் டெண்டர் கோரப்பட்டு இருப்பதால் எங்களுக்கான உரிமை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த டெண்டருக்கு தடை விதிக்க வேண்டும்’ என வலியுறுத்தப்பட்டது.
அப்போது அரசு தரப்பில் வாதிடும்போது, ‘மதுக்கடைகளில் திரும்பப் பெறப்படும் காலிபாட்டில்களை கொள்முதல் செய்வதற்கு மட்டுமே மனுதாரர்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. பார்களில் மது அருந்துவோர் விட்டுச் செல்லும் காலி பாட்டில்களுக்கு மனுதாரர்கள் உரிமை கோர முடியாது’ என தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘பார்களுக்கு புதிதாக டெண்டர் கோரப்பட்டாலும் மதுக்கடைகளில் திரும்பப் பெறப்படும் காலி மதுபாட்டில்கள் மனுதாரர்களுக்குத்தான் கிடைக்கும் என்பதால் டெண்டர் நடைமுறைகளுக்கு தடை விதிக்க முடியாது’ எனக்கூறி வழக்குகளை முடித்து வைத்துள்ளனர்.
அதேநேரம், ‘ரூ.10-ஐ ரொக்கமாக வழங்குவதால் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது. எனவே, பாட்டில்களில் பார்கோடு பயன்படுத்தலாம் அல்லது இந்த தொகையை பார் உரிமைதாரர்களுக்கு வங்கி கணக்கில் செலுத்து முறையை கொண்டு வரலாம்’ என நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், ‘குடி என்னும் தீய பழக்கத்துக்கு மக்கள் ஆளாவதன் மூலம் வருமானம் ஈட்டலாம் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது’ என டாஸ்மாக் நிர்வாகத்துக்கும், டாஸ்மாக் ஒப்பந்ததாரர்களுக்கும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.