Breaking News
Home / செய்திகள் / ஜம்மு காஷ்மீர் விவகாரம்; தீர்ப்பை உச்சநீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்: ஜவாஹிருல்லா கோரிக்கை

ஜம்மு காஷ்மீர் விவகாரம்; தீர்ப்பை உச்சநீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்: ஜவாஹிருல்லா கோரிக்கை

சென்னை: ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு மாநிலங்களின் உரிமைகளுக்கு பங்கம் விளைவிக்கும் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; பாஜகவின் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான வெறுப்பு அரசியலை விதைக்கின்ற மூன்று கொள்கைகள்; 1. பாபர் மஸ்ஜித் இடத்தில் ராமர் கோயில் கட்டுவது 2. காஷ்மீருக்குச் சிறப்புத் தகுதி அளிக்கும் அரசியல் சட்டத்தின் 370 பிரிவை நீக்குதல் 3. பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருதல். இம்மூன்று லட்சியங்களில் இரண்டை பாஜக எட்டியுள்ளது என்பதை விட அவ்விரண்டு அராஜக நடவடிக்கைகளுக்கும் உச்ச நீதிமன்றத்தின் அங்கீகாரம் கிடைத்திருப்பது மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியும் அளித்துள்ளது.

2019 ஆம் ஆண்டு ஒன்றிய பாஜக அரசு காஷ்மீருக்கு சிறப்பு தகுதியளிக்கும் அரசியல் சட்டத்தின் 370 வது பிரிவை நீக்கியதோடு காஷ்மீரை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு ஒன்றிய பிரதேசங்களாக பிரித்து அறிவித்தது. ஒன்றிய பாஜக அரசின் அப்பட்டமான பாசிச நடவடிக்கையை எதிர்த்து காஷ்மீர் மாநிலத்தின் சார்பின் 23 வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டன. வழக்கு தொடுத்து நான்கு ஆண்டுகள் கழித்து உச்ச நீதிமன்ற அதிர்ச்சி தீர்ப்பை வெளியிட்டுள்ளது. அரசியல் சட்டத்தின் முதன்மை பாதுகாவலனாக இருக்க வேண்டிய ஒன்றிய அரசினால் அதன் ஒரு பிரிவு சிதைக்கப்பட்டதை இத்தீர்ப்பில் உச்சநீதிமன்றம் சரி காண்பது கவலைக்குரியதாகும்.

ஒரு மாநிலத்தின் சுயாட்சி உரிமையை ஒன்றிய அரசால் காலில் போட்டு மிதிக்க முடியும் என்பதற்கு இந்த நடவடிக்கை ஓர் அபாயகரமான முன்னுதாரணமாக அமைந்துள்ளது. 370 ஆவது பிரிவு அரசியல் சாசனத்திற்கு வந்த வரலாற்றை அறிந்தோருக்கு அது அரசியல் சட்டத்தின் இன்றியமையாமை எளிதில் விளங்கும். சட்டமன்றம் இல்லாத தருணத்தில் ஜம்மு காஷ்மீர் அனுபவித்த முழு மாநில அந்தஸ்தை நீக்கும் உரிமையை நாடாளுமன்றம் எடுத்த அவலம் நாட்டில் முதன் முறையாக ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் நடைபெற்றுள்ளது. ஆனால் உச்சநீதிமன்றம் ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை குறித்து விவாதிக்கப் போவதில்லை என்று குறிப்பிட்டிருப்பது எதிர்காலத்தில் விபரீதங்களை ஏற்படுத்தும்.

எதிர்காலத்தில் ஒன்றியத்தில் ஆட்சிக்கு வரும் எந்தவொரு கட்சியும் தனது காழ்ப்புணர்ச்சியின் காரணமாக முழு மாநில அந்தஸ்தில் உள்ள மாநிலத்தில் குடியரசு ஆட்சியை பிறப்பித்து பிறகு அதனை பிரித்து யூனியன் பிரதேசங்களாகத் தரம் தாழ்த்தும் பேரபாயத்திற்கு இந்தத் தீர்ப்பு வழிவகுத்துள்ளது. இதன் மூலம் அரசமைப்புச் சட்டத்தின் முதல் பிரிவான இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்ற கூட்டாட்சி கொள்கையை கேள்விக் குறியாக்கியுள்ளது. 2024 இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 370 வது பிரிவு செல்லும் என அறிவிக்கப்பட்டால் இத்தீர்ப்பின் நிலை என்ன ஆகும்.

மக்களுக்காகவே சட்டங்கள் உள்ளனவே அன்றி சட்டத்திற்காக மக்கள் இல்லை. அரசமைப்புச் சட்டத்தின் 370 வது சிதைக்கப்பட்டதை அங்கீகரிப்பது அடுத்தடுத்த பிற மாநிலங்களில் இந்தப் பதற்றம் பற்றிக் கொள்ள வழி வகுப்பதாகவே அமையும். எனவே 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைக்கப்பட்டு உச்ச நீதிமன்றம் இத்தீர்ப்பை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Loading

About Admin

Check Also

“தேர்தல் பத்திர பிரச்சினையை திசைதிருப்பவே சிஏஏ அமல்” – செல்வப்பெருந்தகை

சென்னை: தேர்தல் நன்கொடை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பை திசைத் திருப்பவே குடியுரிமை திருத்த சட்ட அமலாக்க அறிவிப்பை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *