சென்னை: நேற்றிரவு தூத்துக்குடியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்தில் சிக்கியிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து காரணமாக செங்கல்பட்டில் புறநகர் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. சமீப காலங்களாக தொடர்ச்சியாக நடக்கும் ரயில் விபத்துக்களுக்கு என்ன காரணம்? என்பதை துறை சார்ந்தவர்கள் விளக்கியுள்ளனர்.
இந்தியன் ரயில்வே: உலகின் மிகப்பெரிய ரயில் சேவையில் ‘இந்தியன் ரயில்வே’ முதன்மையானதாகும். ஏறத்தாழ 130 ஆண்டுகள் பழமையான இது 12 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களுடன் இயங்கி வருகிறது. ஆண்டுக்கு சுமார் 500 கோடி பயணிகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சேர்க்கிறது. ஆனால் இவ்வளவு பழமை வாய்ந்த ரயில்வே துறையில் சமீப நாட்களாக நடக்கும் விபத்துக்கள் விவாதங்களை கிளப்பியுள்ளன.
ரயில் விபத்து: ஒடிசா ரயில் விபத்து, ஆந்திரா ரயில் விபத்து என கடந்த 6 மாதத்தில் அடுத்தடுத்து இரண்டு பெரிய விபத்துக்கள் நடந்திருக்கின்றன. இது தவிர அவ்வப்போது உயிரிழப்புகள் இல்லாமல் சிறு சிறு விபத்துக்களும் நடக்கின்றன. இதன் தொடர்ச்சியாக நேற்று செங்கல்பட்டில் சரக்கு ரயிலின் 10 பெட்டிகள் தடம் புரண்டிருக்கின்றன. இதனால் சென்னை கடற்கரையில் இருந்து சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டுமே புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது.
செங்கல்பட்டு விபத்து: 2 மணிநேரமாக செங்கல்பட்டில் புறநகர் ரயில்கள் இல்லாததால், பள்ளி, கல்லூரிகள் மற்றும் பணிக்கு செல்வோர் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டிருக்கின்றனர். திருமால்பூரில் இருந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு வழியாக சென்னை கடற்கரை செல்லும் ஒரு ரயில் மட்டுமே வந்ததால், அந்த ரயிலில் ஆபத்தான முறையில் தொங்கியபடி பயணிகள் பயணித்து வருகின்றனர்.
காரணம்: கடந்த சில ஆண்டுகளாக இது போன்ற ரயில் விபத்துகள் அடிக்கடி நடந்தது கிடையாது. ஆனால் தற்போது தினமும் ஒரு விபத்தாவது நடந்துவிடுகிறது. இதற்கான காரணம் என்ன? இதை எப்படி சரி செய்வது என்பது குறித்து டிஆர்இயு ரயில்வே சங்கத்தின் தலைவர் இளங்கோ விளக்கமளித்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது,
ஆட்கள் தேவை: “ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே துறையிலிருந்து 50 ஆயிரம் ஊழியர்கள் வெளியே செல்கின்றனர். ஆனால் இவை உடனடியாக நிரப்பப்படுவதில்லை. அல்லது சொற்பமான அளவில்தான் நிரப்பப்படுகிறது. இதுவே சமீபத்திய ரயில் விபத்துகளுக்கு முக்கியமான காரணம். ரயில்வே பாதுகாப்பு துறையில் மட்டும் சுமார் 1.72 லட்சம் ஊழியர்களை உடனடியாக நிரப்ப வேண்டிய தேவை இருக்கிறது. தண்டவாள பராமரிப்பு பணிக்கு 87 ஆயிரம் பேரும், ஸ்டேஷன் மாஸ்டர் 64 ஆயிரம் பேர், டிரைவர்கள் 10 ஆயிரம், சிக்னல் பராமரிப்பு பணிக்கு 15 ஆயிரம் பேர் உடனடியாக தேவைப்படுகிறார்கள்.
சிக்னல்: அப்படியெனில் இந்த பிரிவுகள் எந்த அளவுக்கு பலவீனமாக இருக்கிறது என்று பாருங்கள். ஒவ்வொரு வருஷத்துக்கும் 200 சிக்னல்கள் பழுதாகிறது. அதில் 100தான் பராமரிக்கப்படுகிறது. இப்படியே ஆண்டுக்கு 100 என கூட்டிக்கொண்டே வந்தால் தற்போது சிக்னல் பராமரிப்புக்கு மட்டும் ரூ.7,800 கோடி தேவைப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. மறுபுறம் சிக்னலை பராமரிக்க 10 பேர் தேவை எனில் 7 பேரை கொண்டு அந்த வேலையை செய்ய சொல்கிறார்கள்.
இருப்பதோ ஏற்கெனவே பழைய சிக்னல். இதில் ஆள் பற்றாக்குறையோடு வேலை நடந்தால் அந்த வேலை முழுமையாக இருக்காது. எனவே சரி செய்யப்பட்ட 100 சிக்னல்களிலும் அடிக்கடி கோளாறு எழும். இது ஒரு ‘டைம் லூப்’ மாதிரி, இதிலிருந்து வெளியே வர வேண்டும் எனில் உடனடியாக ஆட்களை எடுக்க வேண்டும்.
தண்டவாளம்: மறுபுறம் அப்படியே தண்டவாளம் பக்கம் வருவோம். சென்னை-மும்பை-ஹவுரா-டெல்லி இதுதான் இந்தியன் ரயில்வேயின் தங்க நாற்கர சாலை. நாட்டின் மொத்த பாதையில் 20% தண்டவாளங்கள் இந்த வழித்தடத்தில் இருக்கிறது. ஆனால் மொத்த ரயில் போக்குவரத்தில் 55% ரயில்கள் இந்த வழியில்தான் பயணிக்கின்றன. எனவே இந்த தண்டவாளங்களை பராமரிக்க வேண்டியது மிக மிக அவசியம். ஒரு நாளைக்கு இந்த வழியாக 100 ரயில்கள் போக முடியும் எனில் 70 ரயில்களைதான் அனுமதிக்க வேண்டும்.
தொழில்நுட்பம்: மீதம் 30 ரயில்கள் செல்லும் நேரத்தை பயன்படுத்தி தண்டவாளத்தை பராமரிக்க வேண்டும். இதை ‘பிளாக் டைம்’ என்று சொல்லுவார்கள். ஆனால் இங்கு 150 ரயில்கள் இயக்கப்படுகிறது. இப்படியே தண்டவாள பராமரிப்பை பெண்டிங் வைத்து வைத்து தற்போது 10 ஆயிரம் கி.மீ தண்டவாளத்தை உடனடியாக சரி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். தொழில்நுட்பத்திலும், ஊழியர்கள் பற்றாக்குறையிலும் இந்த மாதிரியான பிரச்னைகள் இருக்கும் நிலையில், இருக்கும் ஊழியர்கள் இதைவிட அதிகமான பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளனர்.
நைட் ஷிப்ட்: சென்னையிலிருந்து ஒரு ரயில் புறப்பட்டு திருவனந்தபுரம் செல்கிறது எனில், அந்த ரயிலின் டிரைவருக்கு 16 மணி நேர ஓய்வு கொடுக்க வேண்டும் என்பது ரூல். ஆனால் 4-5 மணி நேரத்தில் அந்த டிரைவரை மற்றொரு ரயிலை இயக்க கட்டாயப்படுத்துகிறார்கள். டிரைவர்கள் வாரத்தில் 2 முறைதான் நைட் ஷிப்ட் பார்க்க வேண்டும். ஆனால் 4-5 நாட்கள் இரவில் பணி செய்ய வலியுறுத்துகிறார்கள். இப்படி தூக்கமில்லாமல் வண்டியை ஓட்டும்போது விபத்துக்கள் நடப்பது இயல்பாகிவிடுகிறது.
தீர்வு: இந்த விபத்துகள் ஏன் நடக்கிறது? என டாஸ்க் போர்ஸ் ஆராய்ந்தது. அதில், ஓய்வுக்கு பின்னர் ரயிலை இயக்கும்போது அதிக விபத்து நடக்கிறது என்பது கண்டறியப்பட்டது. இந்த தகவலையும், மேற்குறிப்பிட்ட தகவலையும் இணைத்து பார்த்தால் தவறு யார் மேல் இருக்கிறது என்பது புரிந்துவிடும். இதையெல்லாம் சரி செய்ய உடனடியாக ஆட்களை எடுக்க வேண்டும். அதுவும் அடுத்த 3 ஆண்டுகளுக்கு சேர்த்து எடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் இந்த பிரச்னைக்கு தீர்வு காண முடியும்” என்று கூறியுள்ளார்.