சென்னை: சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் சென்னையில் இன்று 4 பள்ளிகள் மட்டும் திறக்கப்படவில்லை என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மிக்ஜாம் புயலால் கடந்த டிசம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை கொட்டியது. இதனால் பல பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துவிட்டது. வீட்டில் வைத்திருந்த மின்சாதன பொருட்கள், பர்னிச்சர்கள் எல்லாம் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன. பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. தற்போது, புயலில் இருந்து மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், ‘மிக்ஜாம்’ புயல், வெள்ளத்தால் விடப்பட்ட ஒரு வாரம் விடுமுறைக்கு பிறகு, மீண்டும் பள்ளிக்கு திரும்பிய மாணவர்களுடன் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உரையாடினார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆய்வு நடத்தியபின் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட கடைக்கோடி மக்கள் வரை பாதிப்பில் இருந்து மீளுவதற்கு பணி செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அனைத்து பள்ளிகளும் சுத்திகரிப்பு செய்யப்பட்டுவிட்டு இன்றைய தினம் திறக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், சென்னையில் 4 பள்ளிகளில் பணிகள் நிறைவடையாததால் இன்று திறக்கப்படவில்லை. ஒருசில நாட்களில் இந்த 4 பள்ளிகளும் திறக்கப்படும். மழை காலத்தில் கொசு வராமல் தடுக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் செய்து தரப்படும். இதுவரை 35,000 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.