சென்னை: புயல் மழை நின்று 4 நாட்கள் ஆன பின்னரும் சென்னையில் சில இடங்களில் இன்னும் வெள்ளம் வடியாமல் இருக்கிறது.
அதேபோல வெள்ளம் வடிந்த பகுதிகளில் மின் இணைப்பு வழங்கப்படாததால் மக்கள் போராட்டங்களில் இறங்கியுள்ளனர். பெரம்பூரில் உள்ள மேயர் பிரியா வீட்டினை முற்றுகையிட்ட பொதுமக்கள், குடிநீர், மின்சாரம் குறித்து சரமாரியாக கேள்வியெழுப்பியுள்ளனர்.
வடசென்னை என்பது சாதாரண மழைக்கே ஒரு மாதிரி ஆகிவிடும். அப்படி இருக்கையில், கடந்த 4ம் தேதியன்று ஒரே நாளில் 40 செ.மீ அளவுக்கு மழை கொட்டி தீர்த்திருக்கிறது. சென்னையின் ஆண்டு சராசரி மழை அளவு 100 மிமீ முதல் 1100 மி.மீதான். ஆனால் இதில் மூன்றில் ஒரு பகுதி மழை கடந்த 4ம் தேதி பெய்திருக்கிறது. எனவே சென்னை முழுவதும் வெள்ள காடாக மாறியிருக்கிறது. மழை ஓய்ந்து 4 நாட்கள் ஆன பின்னரும் சென்னையில் சில பகுதிகளில் வெள்ளம் இன்னும் வடியவில்லை.
வடசென்னை: குறிப்பாக வடசென்னையின் பட்டாளம், அம்மையம்மன், திருவொற்றியூர், எண்ணூர், மணலி, எர்ணாவூர் போன்ற பகுதிகளில் நீர் அப்படியே தேங்கி நிற்கிறது. எனவே மின்சாரம் இல்லாமல் மக்கள் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டிருக்கின்றனர். பெரம்பூர், புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் நீர் வடிந்திருந்தாலும் மின் இணைப்பு இன்னும் சீராக கொடுக்கப்படவில்லை. எனவே ஆங்காங்கே மக்கள் போராட்டம் வெடித்திருக்கிறது. பெரம்பூரில் மேயர் பிரியாவின் வீட்டை முற்றுகையிட்ட மக்கள் சீரான மின்சாரம், குடிநீர் வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
மேயர் வீடு முற்றுகை: பெரம்பூரின் 71வது வார்டு கிருஷ்ணதாஸ் சாலை, மங்களபுரம், திருவள்ளுவர் தெரு, ஏ காந்திபுரம், அம்பேத்கர் தெரு, பனைமரத் தொட்டி தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 4 நாட்களாக மின்சாரம் கிடைக்கப்படவில்லை. மட்டுமல்லாது குடிநீர் கிடைப்பது பெரும் சவாலாக இருக்கிறது. மாநகராட்சி சார்பில் விநியோகிக்கப்படும் நீரில் கழிவு நீர் கலந்து வருவதால் மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். இதனால் இன்று காலை பெரம்பூரில் உள்ள மேயர் பிரியாவின் வீட்டை அவர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.
நிலைமை விரைவில் சீரடையும் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து அவர்கள் கலைந்து சென்றிருக்கிறார்கள். சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில் கடந்த 2 நாட்கள் மக்கள் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
சென்னை எவ்வளவு மழையை தாங்கும்?: ஒவ்வொரு ஆண்டும் மழையினால் சாமானிய மக்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள் என்றும், எனவே இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் அவ்வளவு எளிதாக இதற்கு தீர்வு காண முடியாது என சூழலியலாளர்கள் கூறுகின்றனர். அதாவது ஆரம்பத்தில் மீன்பிடி நகரமாக இருந்த சென்னை மெல்ல வளர்ந்து தலைநகராக உருவாகியுள்ளது. இதற்காக ஏராளமான நீர் நிலைகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. அதை மீட்டால் மட்டுமே சென்னையை வெள்ள பாதிப்பிலிருந்து காப்பாற்ற முடியும். சென்னை தற்போது 10-20 செ.மீ மழையை மட்டுமே தாங்கும் என்று விளக்கியுள்ளனர்.
காலநிலை மாற்றம்:உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் தீவிரமடைந்து வருவதால் இனி குறைந்த நேரங்களில் அதிகமான மழைபொழிவை சென்னை போன்ற நகரங்கள் எதிர்கொள்ளும். இதை தவிர்க்க முடியாது. எனவே அதற்கேற்ப நகரங்களை மாற்றி அமைக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக குடிசைகளும், சாமானிய மக்களின் வீடுகளும் இடிக்கப்படுகிறது. இதை எந்த அளவுக்கு அரசு கறாராக பின்பற்றுகிறதோ, அதேபோல பெரிய கட்டிடங்கள், மால்கள், தியேட்டர்கள் என நீர் வழிப்பாதையில் எது இருந்தாலும் அதை அப்புறப்படுத்த வேண்டும் என சூழலியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர் இதுவே சென்னை காப்பாதற்கான வழி என்றும் கூறியுள்ளனர்.