சென்னை: புயல், கனமழை எதிரொலியாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களின் பெரும்பாலான இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இதனால் வீடு, சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் நீரில் மிதந்தன. பள்ளிக்கரணை, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றுவெள்ளத்தில் அடித்துச்செல்வது போல கார்கள் அடித்துச் செல்லப்படும் காணொலி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏராளமான இருசக்கர வாகனங்களும் சேதம் அடைந்தன. தற்போது சென்னையின் சில இடங்களில் தண்ணீர் வடிந்துள்ள நிலையில் கார் மற்றும் இருசக்கர வாகன மெக்கானிக்குகளை தேடி அலைந்து தங்களது வாகனங்களை பழுது நீக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பெரும்பாலான இடங்களில் மெக்கானிக் கடைகளிலும் தண்ணீர் புகுந்துள்ளது. புயல் காரணமாக வங்கிகளுக்கு பொதுவிடுமுறை அளிக்கப்பட்டதால் பெரும்பாலானோருக்கு ஊதியம் கிடைப்பதும் தாமதமாகி வருகிறது. அத்தியாவசிய தேவைக்கே பணமில்லாத நிலையில், வாகன பழுது அவர்களுக்கு கூடுதல் நிதி சுமையை ஏற்படுத்தி இருக்கிறது. திடீர் செலவுகளை சமாளிக்க முடியாமல் நடுத்தர வர்க்கத்தினர் திணறி வருகின்றனர். இதற்கான நிவாரண நடவடிக்கை குறித்து தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா கூறும்போது, “வெள்ளத்தில் பல வாகனங்கள் மூழ்கி சேதமடைந்துவிட்டன. அவற்றை சரி செய்ய சிஎஸ்ஆர் பதிவு செய்து இலவச முகாம்கள் நடத்தப்படும். காப்பீடு கிடைப்பதற்கும் வழிவகை செய்யப்படும்” என்றார்.