சென்னை: சென்னையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆர்எஸ்எஸ் சார்பில் தண்ணீர், உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, குரோம்பேட்டை, கொளத்தூர், வேளச்சேரி,மடிப்பாக்கம் உட்பட 15 இடங்களில் உள்ள பள்ளிகளில், ஆர்எஸ்எஸ்அமைப்பினர் முகாம்களை அமைத்துள்ளனர். அங்கு, பொதுமக்களுக்கு தேவையான உணவுகளை ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளே சமைத்து பல்வேறு பகுதிகளுக்குஎடுத்துச் சென்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகித்து வருகின்றனர்.
சென்னையின் ஒவ்வொரு பகுதிகளிலும் சுமார் 1,500 முதல் 2 ஆயிரம் பேருக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் ஆர்எஸ்எஸ் சார்பில் வழங்கப்படுகிறது. அதேபோல், வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீரில் சிக்கி தவிக்கும் மக்களை படகுகள் மூலம் மீட்டு, முகாம்களில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உதவிகள் ஆர்எஸ்எஸ் சார்பில் செய்யப்பட்டு வருகிறது. மேலும், நிவாரண உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள், 9841987589, 9994128658 என்ற செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம் என ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.