சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை:
புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 12 மணி நேரத்துக்கும் மேலாக பெய்து வரும் தொடர்மழையால் சென்னை வெள்ளக்காடாக மாறியிருக்கிறது. புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகியவையும் மிதக்க தொடங்கியுள்ளன. பேருந்து போக்குவரத்து முதல் விமானப் போக்குவரத்து வரை அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மழை பெய்துவரும் நிலையில், பாதிப்புகளை தடுப்பதோ, குறைப்பதோசாத்தியமல்ல. பல இடங்களில்மரங்கள் சாய்ந்துள்ளன. போக்குவரத்து தடைபட்டிருக்கிறது.
புயல் கரையை கடக்கும் வரைசென்னையில் மழை மேலும் தீவிரமடையும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னையின் பல பகுதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. கொட்டும் மழையிலும் மாநகராட்சிப் பணியாளர்கள் பல்வேறு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். அவர்களுக்கு பாராட்டுகள். ஆனால், மழை மற்றும் புயலின் வேகம் கடுமையாக இருப்பதால் நிலைமையை சமாளிக்க முடியவில்லை.
பாதிப்புகளின் தாக்கத்தைக் குறைக்க பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிர்க்கவேண்டும். வானிலை ஆய்வு மையமும், தமிழக அரசின் பேரிடர் மேலாண்மை மையமும் வழங்கும் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நிலைமை மேலும் மோசமடைந்தால் அதை சமாளிப்பதற்காக தேசிய பேரிடர் மீட்புக் குழுக்களை அதிக அளவில் அனுப்பி வைக்க வேண்டும் என்றுமத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.