சென்னை: சென்னையில் முக்கிய வழித்தடங்களில் உள்ள ரயில் தண்டவாளத்தில் மழை நீர் தேங்கியதால், சென்னை சென்ட்ரல்- கோயம்புத்தூர் வந்தே பாரத் ரயில் உட்பட86 விரைவு ரயில் சேவைகள் நேற்று ரத்து செய்யப்பட்டன. ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால், சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் பயணிகள் தவித்தனர். மேலும், அவர்கள்மாற்று ரயில்களுக்காக காத்திருந்ததால், இந்த ரயில் நிலையங்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
கனமழையால் சென்னை பேசின்பாலம் மற்றும் வியாசர்பாடி இடையே 14-வது பாலத்தில் மழைநீர் தேங்கியது. இதன் காரணமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டிய 25-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. சென்னை சென்ட்ரலில் இருந்து மைசூருக்கு நேற்று காலை 6 மணிக்கு புறப்பட வேண்டிய சதாப்தி விரைவு ரயில் (12007), சென்னை சென்ட்ரல் – கோவைக்கு காலை 6.10 மணிக்கு புறப்பட வேண்டிய கோவை விரைவு ரயில் (12675), சென்னை சென்ட்ரல் – கோவைக்கு நேற்று காலை 7.10 மணிக்கு புறப்பட வேண்டிய சதாப்தி விரைவு ரயில் (12243), சென்னை சென்ட்ரல் – கேஎஸ்ஆர் பெங்களூருவுக்கு நேற்று காலை 7.25 மணிக்கு புறப்பட வேண்டிய டபுள்டக்கர் ஏசி விரைவு ரயில் (22625), சென்னை சென்ட்ரல் – திருப்பதிக்கு நேற்று காலை 6.25 மணிக்கு புறப்பட வேண்டிய சப்தகிரி விரைவு ரயில் (16057) உள்ளிட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
இவைதவிர, திருப்பதி – சென்னை சென்ட்ரலுக்கு நேற்று காலை 6.25 மணிக்கு புறப்பட வேண்டிய விரைவு ரயில் (16204), கேஎஸ்ஆர் பெங்களூரு – சென்னை சென்ட்ரலுக்கு நேற்று காலை 6 மணிக்கு புறப்பட வேண்டிய விரைவு ரயில் (12028), கோவை -சென்னை சென்ட்ரலுக்கு நேற்றுகாலை 6 மணிக்கு புறப்பட வேண்டிய வந்தே பாரத் ரயில் (20644), கேஎஸ்ஆர் பெங்களூரு – சென்னைசென்ட்ரலுக்கு நேற்று காலை 6.25மணிக்கு புறப்பட வேண்டிய லால்பாக் விரைவு ரயில் (12608) உட்பட 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
சென்னை சென்ட்ரல் – மேட்டுப்பாளையத்துக்கு நேற்று இரவு 9.05 மணிக்கு புறப்பட வேண்டிய நீலகிரி விரைவு ரயில் (12671), சென்னை சென்ட்ரல் – கோவைக்கு நேற்று இரவு 10 மணிக்கு புறப்பட வேண்டிய சேரன் விரைவு ரயில் (12673), சென்னை சென்ட்ரல் – போடிநாயக்கனூருக்கு நேற்று இரவு 10.30 மணிக்கு புறப்பட வேண்டிய விரைவு ரயில் (20601) உட்பட 25 மேற்பட்ட விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
காரைக்குடி – சென்னை எழும்பூருக்கு நேற்று அதிகாலை 5.35 மணிக்கு புறப்பட்ட பல்லவன் விரைவு ரயில் செங்கல்பட்டில் நிறுத்தப்பட்டது. இதுபோல, மதுரையில் இருந்து சென்னைக்கு நேற்று காலை புறப்பட்ட வைகை விரைவுரயில் செங்கல்பட்டில் நிறுத்தப்பட்டது. இந்த 2 ரயில்களும் முறையே செங்கல்பட்டில் இருந்து நேற்று முற்பகல், மாலையில் மீண்டும் புறப்பட்டு சென்றன.
சென்னை சென்ட்ரல்- கோவைக்கு புறப்பட வேண்டிய வந்தே பாரத் ரயில் உட்பட 86 விரைவு ரயில் சேவைகள் நேற்று மாலை வரை ரத்து செய்யப்பட்டிருந்தன. 3 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. 12 விரைவு ரயில்கள் காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி, சென்னை கடற்கரை ஆகியஇடங்களில் இருந்து இயக்கப்பட்டன.
ரயில்கள் திடீர் ரத்து காரணமாக, சென்னை சென்ட்ரல், எழும்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல வந்திருந்த பயணிகள் தவித்தனர். மாற்று ரயிலுக்காக, அவர்கள் கத்திருந்ததால், சென்ட்ரல், எழும்பூர் ரயில்நிலையங்களில் கூட்டம் அலைமோதியது.
இதற்கிடையில், ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான முழு கட்டணத் தொகையை பயணிகள் திருப்ப பெற்றுக்கொள்ளலாம் என்று ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டது.