சென்னை: 6ஜி நெட்வொர்க் தொழில்நுட்பத்திற்கு ஏற்றபடி கல்வி தரத்தை மேம்படுத்த அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) அறிவுறுத்தியுள்ளது.
அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள், கல்லூரி, கல்வி நிறுவனங்களின் முதல்வர்களுக்கு யுஜிசி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
6ஜி நெட்வொர்க் தகவல் தொழில்நுட்பம் உருவாக்கி வரும் போக்குகள் மற்றும் சவால்களை எதிர்கொள்ளவும், 5ஜி நெட்வொர்க் அம்சங்களின் முழுத் திறனை பயன்படுத்தவும், நம்முடைய எதிர்கால ஆராய்ச்சியாளர்கள், இன்ஜினியர்கள் தேவையான திறன்கள், மனநிலையை பெற்றிருக்க வேண்டியது அவசியம். எனவே 6ஜி நெட்வொர்க் தொழில்நுட்பம் மற்றும் அதற்கு முந்தைய காலகட்டத்தின் தேவைகளுக்கு ஏற்றபடியும் தகவல் தொடர்பு இன்ஜினியரிங்கில் இளநிலை, முதுநிலை கல்வியை புதுப்பித்து, மாற்றி அமைப்பது மிகவும் முக்கியமானது.
6ஜி நெட்வொர்க் தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் தீவிர ஈடுபாடு இருந்தால் இந்தியாவை மேம்பட்ட தொலைத் தொடர்பு தொழில்நுட்பங்களில் முன்னணியில் நிறுத்தமுடியும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.