சென்னை: மழை மீட்பு பணிகளில் மாநகராட்சி உள்பட பிற துறையினருடன் சென்னை காவல் துறையினர் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகின்றனர்.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கனமழை கொட்டுகிறது. மீட்பு பணிகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. இது ஒரு புறம் இருக்க சென்னை காவல் துறையின் பேரிடர் மீட்பு குழுவினரும் மீட்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக சென்னையில் உள்ள 12 காவல் மாவட்டங்களிலும் தலா ஒரு பேரிடர் மீட்பு குழுவினர் 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளனர். தேவைப்படும் இடங்களுக்கு அவர்கள் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த மீட்பு குழுவினருக்கு மீட்பு பணிகளுக்காக தலா ஒரு வாகனம் என 12 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரப்பர் படகு, மிதவை ஜாக்கெட்டுகள், கயிறு உட்பட 21 வகை மீட்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.
18 ஆயிரம் போலீஸார்: இந்த மீட்பு குழுவினர் நீச்சல் மற்றும் மீட்பு பணிகளுக்கான பிரத்யேக பயிற்சிகளை பெற்றுள்ளனர். மேலும், சட்டம் ஒழுங்கு, குற்றப் பிரிவு, போக்குவரத்து, மத்திய குற்றப் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளைச் சேர்ந்த 18 ஆயிரம் போலீஸார் புயல் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
போலீஸார் அனைவரும் சென்னை மாநகராட்சி, மாநகர போக்குவரத்து கழகம், சென்னை மெட்ரோ ரயில், நெடுஞ்சாலைத் துறை, மின்சாரத் துறை, சுகாதாரத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பிற துறையினருடன் வாட்ஸ் – அப் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டும் நடவடிக்கைகள் குறித்து வாட்ஸ் – அப் குழுக்கள் மூலம் உடனுக்குடன் தகவல் பரிமாற்றம் செய்யப்படுகிறது.
இதன் மூலம் மீட்பு பணிகளை போலீஸார் முடுக்கிவிட்டுள்ளனர். பொது இடங்கள் மற்றும் தனியார் இடங்களில் வைக்கப்பட்டுள்ள பதாகைகள், விளம்பர பலகைகள் மற்றும் புயல் காற்றினால் பறக்கக் கூடிய பிளாஸ்டிக், இரும்புத் தகடு, கட்டுமான பணியில் உள்ள கண்ணாடி மற்றும் தடுப்புகள் உள்ளிட்ட இலகு பொருட்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு ரோந்து போலீஸார் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.
கடற்கரை பகுதிகளில் மிக்ஜாம் புயலின் காரணமாக அலைகள் வேகம் அதிகப்படியாகவும் ஆபத்தான முறையில் இருப்பதால் கடற்கரை பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு ஒலிப் பெருக்கிமூலம் அறிவுரை கூறி அப்புறப்படுத்தி வருகின்றனர். சென்னை பெருநகர காவல்துறையினர் போர்க்கால அடிப்படையில் சேவை செய்ய 24 மணி நேரமும் தயாராக உள்ளதாக காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
கடற்கரைக்கு வர தடை: புயல் காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அங்கு வருவதை தடுக்க போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன்படி மெரினா கடற்கரைக்கு வரும் பிரதான சாலைகளின் நுழைவு பகுதி மற்றும் உட்புற சாலைகள் தடுப்புகளை கொண்டு மூடப்பட்டுள்ளன. இதைதவிர போலீஸார் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.