திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
கி. வீரமணி திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளராக முழு நேரமும் கட்சிப் பொறுப்பை கவனிக்கும் விதத்தில் பெரியாரால் 1962 இல் நியமிக்கப்பட்டவர். பெரியாரின் மறைவுக்குப்பின்பும், மணியம்மையாரின் மறைவுக்குப்பின்பும் தொடர்ந்து இயக்கத்தை நடத்தி வருகிறார். 2003 ஆம் ஆண்டு முதல் திராவிடர் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுச் செயல்படுகிறார். ஆங்கிலத்தில் (The Modern Rationalist) மாத இதழ், தமிழில் விடுதலை (நாளேடு), உண்மை (மாதமிருமுறை ஏடு), பெரியார் பிஞ்சு (குழந்தைகளுக்கான மாத ஏடு) ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்து வருகிறார். பெரியார் அறக்கட்டளை மூலம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். தமிழகத்தையும் தாண்டி வெளிநாடுகளிலும் பெரியாரின் கொள்கைகளை பரப்பி வருகிறார்.
இந்நிலையில் முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் திரு. கி. வீரமணி அவர்களின் 91-வது பிறந்தநாளையொட்டி, அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்கு பொன்னாடை அணிவித்து, புத்தகம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வின்போது, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. எஸ். ஜெகத்ரட்சகன், திராவிடர் கழக பொதுச் செயலாளர் திரு. வீ. அன்புராஜ், ஆசிரியர் திரு. கி. வீரமணி அவர்களின் மனைவி திருமதி வீ. மோகனா அம்மையார் மற்றும் குடும்பத்தினர் உடனிருந்தனர்.