சென்னை: ஒரு லட்சம் பேரிடம் ரூ.2,438 கோடி வரை வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக ஆருத்ரா நிதி நிறுவன இயக்குநர் ராஜசேகர் அபுதாபியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் விரைவில் சென்னை அழைத்து வரப்பட உள்ளார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை அமைந்தகரை மேத்தா நகரை தலைமையிடமாகக் கொண்டு திருவள்ளூர், திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, கோயம்புத்தூர் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ‘ஆருத்ரா கோல்டு டிரெடிங்’ என்ற பெயரில் ஆருத்ரா தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், தங்களிடம் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.36 ஆயிரம் வரை வட்டியாக வழங்கப்படும் என கூறியது. இதை நம்பி பலர், அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.
ஆனால், அந்த நிறுவனம், 1 லட்சத்து 9,255 பேரிடம் ரூ.2,438 கோடி வரை பெற்று மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக தமிழக காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார், அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, 10-க்கும் மேற்பட்டோரை அடுத்தடுத்து கைது செய்தனர்.
இந்த வழக்குத் தொடர்பாக அந்த நிறுவனத்துக்கு சொந்தமான வங்கி கணக்குகளில் இருந்த ரூ.96 கோடி வரை முடக்கப்பட்டது. மேலும், ஆருத்ரா நிறுவனத்துக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள 125-க்கும் அதிகமான சொத்துக்களும் முடக்கப்பட்டன. இதுஒருபுறம் இருக்க அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் ராஜசேகர் உள்ளிட்டோர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றதாக தகவல் வெளியானது. அவர்களை பிடிக்க பொருளாதார குற்றப் பிரிவு போலீஸார் விமான நிலையங்களுக்கு லுக்அவுட் நோட்டீஸ் வழங்கினர். மேலும், இன்டர்போல் எனப்படும் சர்வதேச போலீஸார் மூலம் கைது செய்ய ரெட் கார்னர் நோட்டீஸும் விடுக்கப்பட்டது.
இந்நிலையில், சர்வதேச போலீஸார் உதவியுடன் ராஜசேகரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அபுதாபியில் கைது செய்தனர். அவர் விரைவில் சென்னை அழைத்து வரப்பட உள்ளார். இந்த வழக்கில் நடிகரும், பாஜக பிரமுகருமான ஆர்.கே.சுரேஷ் வரும் 12-ம் தேதி போலீஸாரின் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், இந்த வழக்கு விவகாரம் சூடுபிடித்துள்ளது.