வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 332 ரன்கள் இலக்கை துரத்திய நியூஸிலாந்து அணியானது 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்து தோல்வியின் பிடியில் சிக்கியிருந்தது.
சில்ஹெட் நகரில் நடைபெற்று வரும்இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 310 ரன்களும், நியூஸிலாந்து அணி 317 ரன்களும் எடுத்தன. 7 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வதுஇன்னிங்ஸை விளையாடிய வங்கதேச அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 68 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்தது.
நேற்று 4-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய வங்கதேசம் அணி 100.4 ஓவர்களில் 338 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ 105, முஸ்பிகுர் ரகிம் 67, மெஹிதி ஹசன் 50 ரன்கள் சேர்த்தனர். நியூஸி. அணி சார்பில் அஜாஸ் படேல் 4,இஷ் சோதி 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து 332 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நியூஸிலாந்து சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது. டாம் லேதம் 0, டேவன் கான்வே 22, கேன் வில்லியம்சன் 11, ஹென்றி நிக்கோல்ஸ் 2, டாம் பிளண்டல் 6 ரன்களில் நடையை கட்டினர். 60 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்த நிலையில் களமிறங்கிய கிளென் பிலிப்ஸ் 12 ரன்களில் வெளியேறினார்.
ஒருபுறம் விக்கெட் சரிந்த நிலையில் மறுமுனையில் டேரில் மிட்செல் நிலைத்து நின்று விளையாடினார். இதனால் நியூஸிலாந்து அணி 41-வது ஓவரில்100 ரன்களை எட்டியது. அவருக்கு உறுதுணையாக விளையாடி வந்த கைல் ஜேமிசன் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். நேற்றைய ஆட்டத்தின் முடிவில் நியூஸிலாந்து 49 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்தது.
டேரில் மிட்செல் 44, இஷ் சோதி 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வங்கதேச அணி தரப்பில் தைஜூல் இஸ்லாம் 4 விக்கெட்களை வீழ்த்தினார். ஷோரிபுல் இஸ்லாம், மெஹிதி ஹசன், நயீம் ஹசன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். கைவசம் 3 விக்கெட்கள் மட்டுமே இருக்க வெற்றிக்கு மேற்கொண்டு 219 ரன்கள் தேவை என்ற நிலையில் இன்றைய கடைசி நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது நியூஸிலாந்து அணி.